உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

வான பறையொலி எலிவேட்டைக்குப் பொருந்துமா?” என்று அரசன் கூற, அமைச்சன், “ மேலும், அவன் உடனே புறப்பட்டு வருகிறபடியால், அவனிடம் போதிய சேனை இராது” என்றான்.

"பெரிய சேனையுடன் வந்தால்தான் என்ன? குடிலரே! நீர் போய் போருக்கு வேண்டிய ஆயத்தங்ளைச் செய்யும். நாமும் இதோ வருகிறோம்” என்று சொல்லி அரசன் போய் விட்டான்.

அப்போது, தனியே இருந்த குடிலனிடம் வாயிலண்டை இருந்த சேவகன் வந்து வணங்கி, “தங்களைப் போன்ற சூழ்ச்சிமிக்க அமைச்சர் யார் உண்டு? தாங்கள் கருதிய எல்லாம் நிறைவேறும்” என்று கூறினான். அதைக் கேட்டுக் குடிலன் திடுக்கிட்டான். ஆனாலும், வெளிக்குக் காட்டாமல், “நல்லது. நீ போய்க்கொள்” என்று கூற அவன் போய்விட்டான். குற்றமுள்ள நெஞ்சினனாகிய குடிலனுடைய மனத்திலே சேவகன் கூறிய சொற்கள் கலக்கத்தை உண்டாக்கின.

அவன் தனக்குள்ளே கூறிக்கொள்கிறான்: “அவன் சொல்லியது என்ன? கள்ளப்பயல். என் கருத்தை அவன் அறிந்திருப்பனோ ? அரசனிடம் கூறுவனோ? நமது அந்தரங்க சூழ்ச்சிகள் இவனுக்கு எப்படித் தெரியும் ? ஒருவேளை நாராயணன் சொல்லியிருப்பானா ? அவன் சொல்லி யிருக்கக் காரணம் இல்லை. ஓகோ! அன்று இவனுக் குத்தானே மாலையைப் பரிசாகக் கொடுத்தோம்? அதற்காக வாழ்த்துக் கூறினான் போலும். 'கள்ளமனம் துள்ளும்' என்றும், 'தன் உள்ளம் தன்னையே சுடும்' என்றும், 'குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும்' என்றும் உலகோர் கூறும் பழமொழி எவ்வளவு உண்மை! அதன் உண்மையை இப்போது நம்மிடத்திலேயே கண்டோம். அவன் வந்து கூறினபோது என் மனம் விதிர்விதிர்த்துப் படபடத்துப் பட்டபாடு என்னே! சீச்சீ! எவ்வளவு அச்சம்! வஞ்சித்து வாழ்வு பெறுவது எவ்வளவு கொடியது! நஞ்சு போல நெஞ்சு கொதிக்க, இரவும் பகலும் பலப்பல எண்ணங்கள் நச்சரிக்க, அடிக்கடி செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டு பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ளும் பேதைமை வேறு உண்டோ! ஓகோ! மனமே! நில் நில், ஓடாதே. என்ன தர்மோபதேசம் செய்கிறாய்! பளபள. என்ன இது? ஏன் என் மனம் இப்படி எண்ணுகிறது! முதலைகள், நாம் கொன்ற பிராணிகளைத் தின்னும்போதல்லவா கண்ணீர்விடும் என்பார்கள்? மனமே, வா. வீண் காலம் போக்காதே. நீதி நியாயங்களைக் கருதுவதற்கு இது காலம் அல்ல” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே குடிலன் சென்றான்.