உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


கொங்குவேளின் பெருங்கதை எழுதப்படவில்லை. வேறு யாரோ எழுதிய பெருங்கதையை அவர்கள் அறிந்திருந்தனர்.

பெருங்கதையின் மூல நூல் பிருஹத்கதை என்பது (பிருஹத் கதை - பெருங்கதை). பிருஹத்கதையை குணாட்டியர் என்னும் புலவர் பைசாச பாஷையில் எழுதினார். குணாட்டியர் தக்கண தேசத்தை அரசாண்ட சாதவாகன அரசனுடைய அமைச்சராக இருந்தவர். சாதவாகன அரசர்களாகிய சதகர்ணியாரைத் தமிழர் நூற்றுவர்கன்னர் என்று கூறினார்கள். ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டில் குணாட்டியர் என்னும் அமைச்சர் பிருஹத்கதையைப் பைசாச பாஷையில் எழுதினார். இது விந்தியமலைத் திராவிட இனத்தைச் சேர்ந்த மொழி என்பர். பைசாச பாஷை என்பது பிராகிருத பாஷையைச் சேர்ந்தது. பிருஹத்கதையின் பெரும் பாகம் அழிந்து போயிற்று. எஞ்சி இருக்கும் பகுதியே இப்போதுள்ள பெருங்கதை.

பிருகத்கதையைத் தமிழில் எழுதியவர் கொங்குவேள் என்னும் சைனர். சைனர்கள் பிராகிருத பாஷைகளைக் கற்றவர்கள். எப்படி என்றால் சைன சமய நூல்கள் பிராகிருத பாஷையில் எழுதப்பட்டுள்ள படியால் அக்காலத்து சைனர் பிராகிருத பாஷையையும் நன்கு கற்றிருந்தார்கள். அந்த முறையில் சைனராகிய கொங்குவேள் நேரே, பைசாச பாஷையில் எழுதப்பட்ட குணாட்டியரின் பெருங்கதையைப் படித்து அதைத் தமிழில் பெயர்த்தெழுதினார் என்பதில் தவறு இல்லை. துர்வினிதன் என்னும் கன்னட நாட்டு அரசன் குணாட்டியருடைய பிருகத்கதையை வடமொழியில் பெயர்த்து எழுதினான் என்றும் அந்த வடமொழியிலிருந்து கொங்குவேள் பெருங்கதையைத் தமிழில் எழுதினார் என்றும் சிலர் கூறுவர். இவர்கள் கூற்று ஏற்கத்தக்கதன்று. பிராகிருத பாஷையை அறிந்தவரான சைனராகிய கொங்குவேள்,நேரே பைசாச பாஷையிலிருந்து பெருங்கதையைப் பெயர்த்தெழுதினார்.

நூல்களும் கருத்துகளும் (சொற்களும்கூட) சமஸ்கிருதத்தில் வந்த பிறகுதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் முட்டாள் தனமான மூடக்கொள்கை, ஆராய்ச்சி இல்லாத சமஸ்கிருதப் பண்டிதர்களிடம் இருந்து வருகிறது. இந்த மூடத்தனத்தைத் தமிழப் பண்டிதர் சிலர் உண்மை எனக் கருதிக்கொண்டுள்ளனர். பௌத்த, சைனர் காலத்தில் பிராகிருத மொழியிலிருந்து தமிழில் நூல்களும் கருத்துகளும் வெளிவந்தன. சமஸ்கிருதம் போலக் காணப்படுகின்ற பல சொற்கள் உண்மையில் பிராகிருத மொழியிலிருந்து தமிழில் வந்தவை.