உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

107


சைனப் புலவர்களில் தமிழ், பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நன்கு கற்றவர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். சைன சமயத்துத் தமிழராகிய கொங்குவேள் பிராகிருதப் பாஷையைக் கற்றவராகையினால் அவர் பைசாச மொழியிலிருந்த பிருகத்கதையை நேராகத் தமிழில் எழுதினார்.

களப்பிரர் காலத்தில் பௌத்த மதமும் சிறப்புற்றிருந்தது. அக் காலத்தில் பௌத்தர்களும் நூல் எழுதினார்கள். அவர்களுடைய நூல்கள் முழுவதும் மறைந்து போயின.

இலக்கிய நூல்கள் (சைவ சமய நூல்கள்) சமண சமய நூல்களைப் பற்றி மேலே கூறினோம். இனி, களப்பிரர் காலத்தில் தோன்றிய சைவ இலக்கியங்களைப் பற்றிக் கூறுவோம். தமிழ்நாட்டில், முக்கியமாகப் பாண்டிநாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பரவி ஆதிக்கம் செலுத்தியதைக் கண்ட சைவ சமயத்தார் தங்கள் சமயம் ஓங்கி வளர வழிவகைகளைத் தேடிக் கடைசியில் பக்தி என்னும் புதிய இயக்கத்தை உண்டாக்கினார்கள் என்று கூறினோம். அகப்பொருளுக்குப் பேரின்பத் தொடர்பான கருத்தைக் கற்பித்து மாந்தருக்கும் (உயிர்களுக்கு) கடவுளுக்கும் தெய்வீகக் காதலைப் பொருத்தி அதைப் பக்தியுடன் இணைத்தார்கள். இந்தப் புதிய கொள்கைக்கு ஆதாரமாக ஒரு நூல் வேண்டுமல்லவா? அதற்காக இறையனார் அகப்பொருள் என்றும் களவியல் என்றும் பெயருள்ள ஒரு நூலை எழுதினார்கள். அது தெய்வீகக் களவியலுக்கு ஆதார நூல் என்று கூறினார்கள். அந்த நூலைச் சிவபெருமானே (இறையனார்) இயற்றினார் என்று கூறினார்கள் ( இது பற்றி இணைப்பு 3 காண்க). இனி அக்காலத்தில் உண்டான சைவ சமய நூல்களைப் பார்ப்போம்.

மூத்த திருப்பதிகங்கள் திருவாலங்காட்டுச் சிவபெருமான் மேல் பாடப்பட்ட படியால் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்று கூறப்படும் இந்தப் பதிகங்களைப் பாடியவர் காரைக்கால் அம்மையார் என்னும் அடியார். இவர் அறுபத்து மூன்று சைவ அடியார்களில் ஒருவர். இவருடைய வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில், காரைக்கால் அம்மையார் புராணத்தில் காண்க. திருப்பதிகங்களைப் பாடியவர் திருநாவுக்கரசு நாயனார். அவர் காலத்திலே திருப்பதிகங்களைப் பாடியவர் அவருக்கு வயதில் இளையவராகிய திருஞான சம்பந்த மூர்த்திநாயனார். இவர்கள் பாடிய பதிகங்களுக்குத் தேவாரத் திருப்பதிகங்கள் என்பது பெயர்.