108
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
இவர்களுக்கு முன்பு முதன்முதலாகத் திருப்பதிகம் பாடியவர் காரைக்கால் அம்மையாரே. ஆகையினால், அம்மையார் பாடிய திருப்பதிகங்களுக்கு மூத்த திருப்பதிகங்கள் என்று பெரியோர் பெயரிட்டுள்ளனர். அம்மையார் பாடிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டே. இவற்றில் முதலாம் மூத்ததிருப்பதிகம் 'கொங்கை திரங்கி நரம்பெழுந்து' என்று தொடங்கும் பதிகம். இதன் பண் நட்டபாடை. இந்தப் பதிகம் பதினொரு செய்யுட்களைக் கொண்டது. இரண்டாவது மூத்த திருப்பதிகம் ‘எட்டி இலவம் ஈகை சூரை' என்று தொடங்குவது. இதன் பண் இந்தளம். இதுவும் பதினொரு பதிகங்களைக் கொண்டது. காரைக்கால் அம்மையார் 7ஆம் நூற்றாண்டிலிருந்த திருநாவுக்கரசருக்கு முந்தியவர் ஆகையால் இவர் கி.பி 5 அல்லது 6ஆவது நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டும். பழைய தேவாரப் பதிப்புகளில் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்களை முதலில் அச்சிட்டுப் பிறகு மற்ற தேவாரப் பதிகங்களை அச்சிடுவது வழக்கமாக இருந்தது.
திருவிரட்டை மணிமாலை
இதனையியற்றியவரும் காரைக்கால் அம்மையாரே. இது கட்டளைக் கலித்துறையும் வெண்பாவும் ஆக இரண்டு செய்யுட்களால் ஆனது, அந்தாதியாகப் பாடப்பட்டது. இருபது செய்யுட்களைக் கொண்டது.
அற்புதத் திருவந்தாதி
இதை இயற்றியவரும் காரைக்கால் அம்மையாரே. நேரிசை வெண்பாவினால் அந்தாதியாக நூற்று ஒன்று செய்யுட்களைக் கொண்ட நூல். சிவபெருமான் மேல் பாடப்பட்டது.
காரைக்கால் அம்மையார் இயற்றிய இந்தத் தோத்திரப் பாடல்கள் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.
கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி
இது நேரிசை வெண்பாவினால் அந்தாதித் தொடையாகச் செய்யப்பட்ட நூறு செய்யுட்களையுடையது. கயிலை மலையிலும் காளத்திமலையிலும் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மேல் பாடப்பட்டது. இதனைப் பாடியவர் நக்கீரதேவநாயனார். இவர் கடைச்சங்க காலத்திலிருந்த நக்கீரர் அல்லர்; களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்த மற்றொரு நக்கீரர்.