114
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
பகுதியில் கடைச்சங்க காலத்தில் இருந்தவர். சிவபெருமான் திருவந்தாதி பாடிய இந்தப் பரணதேவநாயனார் பிற்காலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர்.இவர் வேறு, அவர் வேறு.
கீழ்க்கணக்கு நூல்கள்
இதுவரையில் களப்பிரர் காலத்தில் சைவ, சமண சமயத்தவர் எழுதிய தமிழ் நூல்களைக் கூறினோம். களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட வேறு நூல்களும் உள்ளன. அவை கீழ்க்கணக்கு நூல்கள். கீழ்க் கணக்கு நூல்களைப் பதினெட்டாகப் பிற்காலத்தில் தொகுத்துள்ளனர். பதினெட்டு கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் முற்பட்டவையும் பிற்பட்டவையும் உள்ளன. ஆனால், அவைகளில் பெரும்பான்மையானவை களப்பிரர் ஆட்சிக்காலத்துக்குள்ளாக எழுதப்பட்டவை. பதினெண் கீழ்கணக்கு நூல்களாவன: 1. நாலடியார், 2. நான்மணிக் கடிகை, 3. இன்னாநாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார்நாற்பது, 6. களவழிநாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. திணைமாலை நூற்றைம்பது, 9. திணைமாலை ஐம்பது, 10. திணை மொழி ஐம்பது, 11. ஐந்திணை எழுபது, 12. முப்பால் (திருக்குறள்), 13. திரிகடுகம், 14. ஆசாரக்கோவை, 15. சிறுபஞ்ச மூலம், 16. முதுமொழிக் காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை. இந்தக் கீழ்க்கணக்குப் பதினெட்டு நூல்களில் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய மூன்றும் கடைச்சங்க காலத்தில் கி.பி 250க்கு முன்பு எழுதப்பட்ட நூல்கள். நாலடியார். என்னும் நூல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில், களப்பிரர் ஆட்சிக்குச் சற்றுப் பின்பு எழுதப்பட்டது. பிற பதினான்கு நூல்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் 6ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் போன்ற சிலர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 8 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டன என்று கூறுவர் (P. T. Srinivasa Aiyangar, History of the Tamils). இவர் கூறுவது தவறு. இதுபற்றிய ஆய்வுரையை இணைப்பு 5இல் காண்க.
கீழ்கணக்கு என்பதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். மாந்தர் தம்முடைய உலக வாழ்க்கையில் அடையவேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பயன்களாகும். இந்த நான்கு பயன்களில் வீடு (மோட்சம்) என்பது மறுமையில் பெறப்படுவது.