பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
115
மற்ற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் இம்மையில் (இவ்வுலக வாழ்க்கையில்) அடையப் படுவன. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் கூறுகிற நூல்களுக்குக் கீழ்கணக்கு என்று பெயர் கூறினார்கள். இதைப் பழைய உரையாசிரியர்களும் திருநாவுக்கரசரும் கூறியுள்ளனர். அவற்றைக் காட்டுவோம். பேராசிரியர் என்னும் உரையாசிரியர், தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளில் 547 ஆம் சூத்திரத்துக்கு உரையில் இவ்வாறு கூறுகிறார்;
வனப்பியல் தானே வகுக்குங் காலை
சின்மென் மொழியாற் றாய பனுவலொடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே
“தாய பனுவலொ” டென்பது அறம் பொருள் இன்பமென்னும் மூன்றிற்கும் இலக்கணஞ் சொல்லும்; வேறிடையிடை அவையன்றியும் தாய்ச் செல்வ தென்றவாறு. அஃதாவது பதினெண் கீழ்க்கணக்கென உணர்க. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரே செய்யுள் வந்தவானும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவானும், அறம் பொருள் இன்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்று வருமாறும் கார்நாற்பது களவழிநாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டு கொள்க."
திருநாவுக்கரசு சுவாமிகள் கீழ்க்கணக்கைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். திருக்குறுந்தொகை இன்னம்பர் பதிகத்தில் அடிகள் இவ்வாறு கூறுகிறார்;
தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அலற்று கின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே
இம்மை வாழ்க்கையில் அறம், பொருள், இன்பங்களைப் பெற்று மறுமைக்கு அடையவேண்டிய கடவுள் வழிபாட்டைச் செய்யாதவர்களைக் கடவுள் கணக்கு எழுதிவைக்கிறார் என்று கூறுகிறார். அறம், பொருள், இன்பம் என்னும் இம்மைப் பயன்களைக் கீழ்க்கணக்கு என்று கூறுவது காண்க.
அடிநிமிர் வில்லாச் செய்யுட் டொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்