உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

163



கொண்டவன் என்று பெயர் உண்டு.) புலன்களையும் மனத்தையும் அடக்கி அகப்பகையை வெல்லும் கொள்கை சைனருக்கும் பௌத்தருக்கும் புதியவையன்று. இக்கொள்கை அவர்களுக்குப் பழமையானது. ஆனால், அந்தக் கொள்கை சங்க காலத்தில் தமிழகத்தில் சிறப்புப் பெறவில்லை. புற வெற்றியே-போர்க்கள வெற்றியே பெரிதும் போற்றப்பட்டது.

களப்பிரர் ஆட்சிக் காலத்தில். சைன, பௌத்த சமயங்கள் சிறப்பும் செல்வாக்கும் பெற்ற காலத்தில், அப்பகையை வென்று வீரனாகும் சமயக் கொள்கை வலுப்பெற்றுப் பரவிற்று. இது புறப் பொருளுக்குப் புதிதாக ஏற்பட்ட புது மாற்றம் ஆகும். அந்தக் காலத்திலே சைவ, வைணவ சமயங்கள் சமயப் பிரசாரத்துக்காகப் பக்திக் கொள்கையைப் புத்தம் புதிதாக உண்டாக்கின. இக்கொள்கைக்கு ஆதரவாக அகப்பொருளில் புதிய கொள்கையைப் புகுத்தினார்கள். புறப்பகையை வென்று வெற்றி வீரனாகத் திகழ்வதைவிட அகப் பகையை வென்று வீரனாவதே சிறந்தது என்று சைனரும் பௌத்தரும் புறப்பொருளுக்குப் புதிய கருத்துக் கூறியது போல, சைவரும் வைணவரும் உலகியல் அகப்பொருள் பற்றிச் சிற்றின்பக் காதலைப் பாடுவதைவிடக் கடவுளுக்கும் பக்தருக்கும் உள்ள தெய்வீகக் காதலைப் (பேரின்பக் காதலை) பாடுவது சிறந்தது என்று அகப் பொருளுக்குப் புதிய பொருள் கற்பித்தார்கள். அதாவது, கடவுளைக் காதலனாகவும் (தலை மகனாகவும்} பக்தர்களைக் காதலியாகவும் (தலைவிகளாகவும்) கற்பித்துப் பாடுகிற பேரின்பப் பக்திப் பாடல்களைப் புதிதாகத் தோற்றுவித்தார்கள். இந்தப் பக்திக் காதலைச் சைனரும் பௌத்தரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தெய்வத்துக்கும் மனிதருக்கும் காதல் உறவு கற்பிப்பது சரியன்று என்பது அவர்களது கொள்கை.

ஆனால், சைவ - வைணவர், சமணருக்கும் பௌத்தருக்கும் மாறுபாடான பக்திக் காதலை வற்புறுத்தி அகப்பொருள் துறையமைந்த பக்திப் பாடல்களைப் பரப்பினார்கள். தொடக்கக் காலத்தில் இந்தக் கொள்கை தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்று தோன்றுகிறது. பொது மக்கள், முக்கியமாகப் புலவர்கள், தொல்காப்பிய இலக்கணம் கூறுகிற உலகியல் அகப் பொருளையே பின்பற்றினார்கள். ஆகவே, தெய்வீகக் காதலுக்கு இலக்கணச் சான்று பக்தி இயக்கத் தாருக்குத் தேவைப்பட்டது. ஆகவே, இறையனார் அகப்பொருள்