162
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
5ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இறையனார் அகப்பொருளுக்கு எப்படி உரை கண்டிருக்க முடியும்? ஆகவே, உரைப்பாயிரம் கூறுகிற செய்திகள் நம்பத்தக்கனவல்ல, பக்தி இயக்கக் காலத்தில் இருந்த நக்கீரதேவநாயனாரைக் கடைச்சங்க காலத்தில் இருந்த நக்கீரரோடு தவறாக இணைத்துக் கூறுகிறது உரைப்பாயிரம் (இணைப்பு 4 காண்க).
பக்தி இயக்கக் காலத்தில் கீரன் என்றும் நக்கீரதேவ நாயனார் என்றும் பெயர் கூறப்பட்ட ஒரு சிவபக்தர் இருந்தார். அவருடைய பாடல்கள் பதினோராம் திருமுறையில் தொகுக்கப் பட்டுள்ளன. இந்த நக்கீரனாரையும் இவருக்கு முன்பு சங்க காலத்தில் இருந்த நக்கீரனாரையும் பொருத்திக் கூறுகிறது இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம். ஆனால், இது வரலாற்றுக்குப் பொருந்தாத கற்பனையாகும்.
முடிவுரை
இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் கூறுகிற முரண்பட்ட செய்திகள், விழிப்புடன் படிக்கிறவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்து கின்றன என்பதைக் கண்டோம். இதன் காரணத்தை விளக்குவோம்.
களப்பிரர் காலத்துக்கு முன்பு, சங்க காலத்தில் அகப் பொருள், புறப்பொருள் என்று இரண்டு கொள்கைகள் நாட்டிலும் ஏட்டிலும் இருந்தன. இவை பற்றிப் புலவர்கள் பாடிய செய்யுட்கள் நற்காலமாக இப்போதும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றிற்கு இலக்கணமாக இருந்தது தொல்காப்பியம் (தொல். பொருளதிகாரம்- புறப்பொருளியல், அகப்பொருளியல்).
சங்க காலத்துக்குப் பிறகு களப்பிரர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் முத்தமிழை ஆராய்வதற்காகப் பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கம் கலைந்துவிட்டது. பௌத்த, சைன சமயங்கள் களப்பிரர் காலத்தில், முன்னைவிடச் செல்வாக்கும் சிறப்பும் பெற்று வளர்ந்தன. அப்போது புறப்பொருளைப் பற்றிய புதிய கருத்துச் செல்வாக்கடைந்தது. அதாவது, போரில் புறப் பகைவரை வென்று வெற்றி பெறுவதைவிட, அகப்பகையான மனமாசுகளையும் ஐம்புலன்களையும் அடக்கிப் பெறுகின்ற வெற்றியே சிறந்த வெற்றியென்னும் சைன- பௌத்த மதக் கொள்கை பரவிற்று. (அகப்பகையை வென்று வீரராக விளங்கிய புத்தர்பெருமானுக்கும் அருகக்கடவுளுக்கும் ஜீனன்- வெற்றி