பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
161
பத்தாவது தலைமுறையில் வந்த முசிறியாசிரியர் நீலகண்டனார் இறையனார் களவியலையும் அதன் உரையையும் ஏட்டில் எழுதி வெளியிட்டார். அந்த உரையில் இடையிடையே மாறவர்மன் பராங்குசன் என்னும் பாண்டியன்மேல் பாடப்பட்ட பாண்டிக்கோவை செய்யுட்கள் (ஏறத்தாழ 350 செய்யுட்கள்) மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. மாறவர்மன் பராங்குசன் கி.பி. 770 இல் பாண்டி நாட்டை யரசாண்டான். எனவே, கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இவன் இருந்தான் என்பது தெரிகிறது. இவனுக்கு முன் பத்துத் தலைமுறைக்கு முன்பு இறையனார் களவியல் உண்டாயிற்று என்று கூறப்படுவதால், தலைமுறை யொன்றுக்கு 30 ஆண்டுகள் என்று கணக்கிட்டால் 30 ஓ 10=300 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கு 300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் எழுதப்பட்டன என்பது தெரிகிறது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தமிழகத்தைக் களப்பிர அரசர்கள் அரசாண்டார்கள். களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கடைச்சங்க காலத்தில் நக்கீரர் வாழ்ந்திருந்தார். அந்த நக்கீரர் இறையனார் களவியலுக்கு உரை கண்டிருக்க முடியாது. கி. பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்தவர்.கி.பி. 5ஆம் நூற்றாண்டில் எப்படி இருக்க முடியும்? ஆனால், இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் சங்க காலத்து நக்கீரர் இந்நூலுக்கு உரை கண்டார் என்றும் அவ்வுரையைக் கேட்டவர் காரணிகன் உருத்திரசன்மர் என்றும் கூறுகிறது!
நக்கீரர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் இருந்தவர். இந்த நெடுஞ்செழியன் காலத்துக்குப் பிறகு பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இருந்தான். இந்தப் பாண்டியன் அகநானூற்றைத் (நெடுந்தொகையை) தொகுப்பித்தான். தொகுத்தவர் உருத்திரசன்மன். இவர்கள் எல்லாரும் கி.பி. 250க்கு முன்பு இருந்தவர்கள். நக்கீரர், உருத்திரசன்மனுக்கு முன்பு இருந்தவர். உருத்திரசன்மன், இறையனார் அகப்பொருளுக்கு உரை கேட்டார் என்றும் நக்கீரர் உரை கூறினார் என்றும் களவியல் உரைப்பாயிரம் கூறுவது வரலாற்றுக்குப் பொருந்தாது. உருத்திரசன்மருக்கு முன்பே நக்கீரர் காலமாய்விட்டார். நக்கீரர், உருத்திரசன்மர், உக்கிரப் பெருவழுதி ஆகியோர் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்று கொண்டாலும், கடைச்சங்க காலத்தில் இருந்த இவர்கள், களப்பிரர் காலத்தில், கி.பி.