உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

160

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


 மற்றைய நிகழா; உலகத்தி னொடு இத்துணை மாத்திரையே ஒத்து மற்றை விகற்பமெல்லாம் ஒவ்வாவெனக் கொள்க” என்றும், 39ஆவது சூத்திர உரையில், “இந்நூல் (களவியல்) உலகினோடு ஒத்தும் ஒவ்வாதும் நடக்கின்ற தாகலின், உலகியல் நோக்கிச் சாதிவரையான் இழிந்தாரெனப் பட்டது” என்றும், 60ஆவது சூத்திர உரையில், “அஃது இவ்வுலகினும் இயற்கையான் நிலைபெறாது புலவரான் இல்லது இனியது நல்லதென நாட்டப்பட்டதோர் ஒழுக்க மென்பார் ‘கண்ணிய’ என்றார்” என்றும் களவியல் உரை கூறுகிறது.

இதனால், புதியதாக உண்டாக்கப்பட்ட களவியல், உலகியல் அல்லாத இல்லது இனியது நல்லது என்று புலவரால் புனைந் துரைக்கப்பட்ட காதலைக் கூறுகிறதென்பது தெரிகிறது.

சமண சமயமும் பௌத்த சமயமும் தமிழகத்தில் பெருகி வளர்ந்து சைவ, வைணவச் சமயங்கள் தாழ்ந்து குன்றியிருந்த களப்பிரர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில்) சைவரும் வைணவரும் தங்கள் சமயங்களை வளர்ப்பதற்காகப் புதிய பக்தி இயக்கத்தை உண்டாக்கினார்கள். அதன் காரணமாக அகப்பொளுக்குப் புதிய கருத்துகளைக் கற்பித்தார்கள். சிவபெருமானை அல்லது திருமாலைத் தலைவனாகவும் பக்தனாகிய உயிரைத் தலைவியாகவும் கற்பித்து நாயகன்- நாயகி பாவத்தை யமைத்தார்கள். இந்த முறையில் செய்யுள் பாடுவதற்கு இலக்கணச் சான்று உண்டா என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். இக்கேள்விக்கு விடையாக இறையனார் அகப் பொருள் என்னும் நூலைப் புதிதாக உண்டாக்கி அதற்குத் தெய்வத் தன்மை கற்பித்தார்கள் போலும். இந்த நூலில் பேரின்பக் காதலைப் பற்றி வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சான்றுகள் இல்லையானாலும் உரையாசிரியர்கள் உரையில் சான்று காட்டினார்கள். ஆனால் - அந்த உரை ஏட்டில் எழுதப்படாமல் பத்துத் தலைமுறை வரையில் மந்திரம் போல மறை பொருளாகவே வைக்கப்பட்டு ஆசிரிய மாணவர் பரம்பரையாகச் செவிவழியாக வந்தது. இதற்குள்ளாகப் புலவர்கள் களவியல் துறையமைத்துப் பாடல்களை இயற்றினார்கள். களவியல் துறையமைந்த பக்தித் தோத்திரப் பாடல்கள் வெளிவந்து வழக்கத்தில் ஒன்றினபிறகு களவியல் நூலையும் அதன் உரையையும் எழுதினார்கள். அதாவது, கி.பி. 8ஆம் நூற்றாண்டில், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகியோரின் தேவாரப் பாடல்கள் தோன்றிய பிறகுதான் இந்நூலையும் உரையையும் ஏட்டில் எழுதினார்கள்.