உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு

195


நன்னனுடைய பட்டத்து யானையைக் கொன்றுவிட்டனர் என்று அவர் எழுதியுள்ளார்¹, மா என்பதற்கு விலங்கு (யானை) என்றும் பொருள் உண்டாகையால் அவ்வாறு அவர் எழுதி விட்டார். அது தவறு. மா என்பது இங்கு மாமரத்தையே குறிக்கும்.)

கடல் துருத்திக் குறும்பர்

நன்னனுடைய துளு நாட்டுக்கு அருகிலே கடலிலே ஒரு சிறு தீவு இருந்தது. (இத்தீவைப் பற்றி முன்னமே கூறியுள்ளோம்.) அத்தீவில் குறும்பனாகிய ஒரு வீரன் இருந்தான். அவன் அந்தத்தீவில் கடம்ப மரத்தைக் காவல்மரமாக வைத்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைச் சார்ந்த வீரர்களுடன் சேர்ந்து, அக்காலத்தில் ரோமாபுரியிலிருந்து வாணிகத்தின் பொருட்டுச் சேர நாட்டுக்கு வந்துகொண்டிருந்த யவனக் கப்பல்களைக் கொள்ளையடித்து அக்கப்பல்கள் சேரநாட்டுக்கு வருவதைத் தடுத்துக்கொண்டிருந்தான். இவ்வாறு பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. இந்தக் தீவிலிருந்த குறும்பச் சிற்றரசன் நன்னனுக்குக் கீழடங்கியவன். நன்னனுடைய தூண்டுதலினாலே அக்குறும்பன் யவனக் கப்பல்களைச் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வராதபடி கொள்ளையடித்துக் கொண்டிருந்தான். கி.பி.முதல் நூற்றாண் டின் இறுதியில் இருந்த பிளைனி என்னும் யவனர், இவ்விடத்தில் கடற் கொள்ளைக்காரர் இருந்ததை எழுதியிருக்கிறார்.

கடல் துருத்தியில் (கடல் தீவில்) இருந்துகொண்டு யவன வாணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தபடியால், யவன வாணிகக் கப்பல்கள் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினங்களுக்கு வருவது தடைப்பட்டது. யவனக் கப்பல்கள் துளுநாட்டுக் கடற்கரையைக் கடந்துதான் சேரநாட்டுக்கு வரவேண்டும். யவனக் கப்பல்கள் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வருவது தடைப்பட்டபடியால் சேரநாட்டு வாணிகம் பெரிதும் குறையத் தொடங்கிற்று. இதனால், கடல் துருத்தியில் (தீவில்) இருந்த குறும்பரை அடக்கவேண்டியது சேர அரசனின் கடமையாக இருந்தது.

கடற் போர்

அக்காலத்தில் சேரநாட்டையரசாண்ட சேரஅரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன். இந்த நெடுஞ்சேரலாதனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்), ஆடு