உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

196

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


கோட்பாட்டுச் சேரலாதன், இளங்கோஅடிகள் என்பவராவர். இதனைப் பதிற்றுப்பத்து 4ஆம் பத்து, 5ஆம் பத்து, 6ஆம் பத்துப் பதிகங்களினாலும் சிலப்பதிகாரம் வரந்தருகாதை (171-181) பதிகம் இவற்றின் உரைகளினாலும் அறிகிறோம்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடல் தீவிலிருந்த குறும்பனை அடக்குவதற்காக அவன் மேல் படையெடுத்தான். இவன், கடற்படை யொன்றைத் தன் மகனாகிய செங்குட்டுவன் தலைமையில் அனுப்பினான். அக்காலத்தில் இளவரசனாக இருந்த செங்குட்டுவன் கடற்படையோடு சென்று கடல் தீவிலிருந்த குறும்பருடன் போர்செய்து அவர்களை வென்று அவர்கள் காவல் மரமாக வளர்த்து வந்த பேர்போன கடம்ப மரத்தைத் துண்டு துண்டாக வெட்டி அதனால் முரசுசெய்தான். கடல் குறும்பர்கள் அடியோடு ஒழிந்தனர். அதன் பிறகு யவனக் கப்பல்கள் வாணிகத்தின் பொருட்டுச் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து வாணிகஞ் செய்தன.

கடல் துருத்திப் போர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில், அவன் மகனான சேரன் செங்குட்டுவன் இளவரசனாக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. அதனால் கடற்போரை வென்றவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும் சேரன் செங்குட்டுவன் என்றும் பதிற்றுப் பத்து 2 ஆம் பத்தும் 5 ஆம் பத்தும் கூறுகின்றன. செங்குட்டுவன், கடற்போரைத் தானே முன்னின்று நடத்தி வெற்றிபெற்ற படியால் அவன் ‘கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்’ என்று பெயர் பெற்றான்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடற்போரை வென்ற செய்தியைப் பதிற்றுப்பத்து 2ஆம் பத்து இவ்வாறு கூறுகிறது:

பவர் மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரரி நறவின் ஆர மார்பின்

போரடு தானைச் சேர லாத

(2ஆம் பத்து 1:12-16)

என்று கூறுகிறது.

இதில், ‘திரள் பூங்கடம்பின் கடியுடை முழு முதல் துமிய ஏய்’ என்று கூறப்படுவது காண்க (ஏய்- ஏவி). நெடுஞ்சேரலாதன் கடற்போரைச் செய்யத் தன் மகனை ஏவினான் என்பதும் தான் நேரில் அப்போரைச் செய்யவில்லை என்பதும் இதனால் தெரிகின்றன.