பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு
209
நன்னர் காலம்
துளு நாட்டு அரசர்களைப் பற்றிய வரலாறு, கி. பி. 4ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கின்றன. ஆனால், அவ்வரசர்கள் நன்ன அரசர் பரம்பரையினர் அல்லர்; வேறு அரச பரம்பரையினர். ஆனால், சங்க காலத்துத் துளு நாட்டின் பழைய வரலாறு சங்க நூல்களைத் தவிர வேறெங்கும் கிடைக்கவில்லை. சங்க நூல்களிலே துளு நாட்டைப் பற்றியும் துளு மன்னர்களைப் பற்றியும் கூறியுள்ளவற்றை மேலே விளக்கிக் கூறினோம். மூன்று நன்னர் இருந்ததையும் அவர்கள் ஏறத்தாழக் கி. பி. 100 முதல் 180 வரையில் இருந்தார்கள் என்பதையும் கூறினோம். இதுவே ஏறத்தாழச் சரியான காலம் என்பதை இங்கு விளக்குவோம்.
I. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர நாட்டை யரசாண்ட காலத்தில் துளு நாட்டை முதலாம் நன்னன் அரசாண்டான் என்று கூறினோம். நன்னன் ஆட்சிக் காலத்திலே அவனுடைய மகனான இரண்டாம் நன்னன் இளவரசனாக இருந்தான் என்பது சொல்லாமலே அமையும். முதலாம் நன்னனுடைய ஆட்சிக் காலத்தில் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்த கடல் துருத்தியில் (கடல் தீவில்) குறும்ப அரசன் ஒருவன் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராகக் குறும்பு செய்தான் என்றும் அவனை நெடுஞ்சேரலாதன் கடற்போரில் வென்று அடக்கினான் என்றும் கூறினோம். அந்தக் கடற்போரை நேரில் சென்று நடத்தியவன் அவனுடைய இளைய மகனான சேரன் செங்குட்டுவன் (கடல் பிறக்கோட்டிய குட்டுவன்) என்றுங் கூறினோம். அப்போது செங்குட்டுவன் இளவரசனாக இருந்தான் என்பதையும் தெரிவித்தோம். ஆகவே, முதலாம் நன்னனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் சமகாலத்தினர் என்பது தெரிகின்றது.
II. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்தபிறகு சேரநாட்டை யரசாண்டவன் அவனுடைய மூத்த மகனான களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இவன் காலத்தில் துளு நாட்டையரசாண்டவன் நன்னன் இரண்டாவன். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் அரசாண்ட காலத்தில் அவனுடைய தம்பியாகிய சேரன் செங்குட்டுவனும் இளைய தம்பி