210
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
யாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் சேரநாட்டின் வெவ்வெறிடங்களை ஆட்சி செய்தனர்.
நார்முடிச் சேரலின் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் பசும்பூண் பாண்டியன். பசும்பூண் பாண்டிய னுடைய சேனைத்தலைவனாக இருந்தவன் தகடூர் அரசனாகிய அதிகமான் நெடுமிடல் என்பவன். அதிகமான் நெடுமிடலை நார்முடிச்சேரல் போரில் வென்றான். பிறகு, அதிகமான் நெடுமிடல் துளு நாட்டில் சென்று போர் செய்தான். அவனை நன்னன் இரண்டாவனுடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் போரில் கொன்று விட்டான்.
நார்முடிச் சேரல் சேனாதிபதியாகிய வெளியன் வேண்மான் ஆய்எயினன் என்பவனைத் துளு நாட்டின் மேல்போர் செய்ய அனுப்பினான். அவனை நன்னனுடைய சேனாதிபதி மிஞிலி போரில் கொன்றுவிட்டான். பிறகு, நார்முடிச்சேரலும் அவன் தம்பியராகிய செங்குட்டுவனும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் துளு நாட்டின்மேல் போர்செய்து நன்னன் இரண்டாவனைப் போரில் கொன்று துளு நாட்டைக் கைப்பற்றினார்கள் என்பதைக் கூறினோம்.
நன்னன் இரண்டாவன் இறந்த பிறகு அவனுடைய மகனான நன்னன் மூன்றாவன் சேரருக்குக் கீழடங்கி நன்னன் உதியன் என்று பெயர் சூட்டிக்கொண்டு அரசாண்டான் என்பதையும் கூறினோம்.
மூன்று நன்னர்களும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், அவன் மக்களான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், செங்குட்டுவன் (கடல் பிறக்கோட்டிய குட்டுவன்), ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்பவர்களின் சமகாலத்தவர் என்பதை மேலே விளக்கிக் கூறினோம்.
துளு நாட்டுப் போர்களில் சேரன் செங்குட்டுவன் முக்கியமான பங்குகொண்டிருந்தான். தன் தந்தை நெடுஞ்சேரலாதன் காலத்தில் நிகழ்ந்த கடற்போரில் தானே முன்நின்று போரை நடத்தி வெற்றிபெற்றான். தன் தமயனான நார்முடிச் சேரல் செய்த துளுநாட்டுப் போரில் இவன் முக்கியப் பங்கு கொண்டு போரை வென்றான். இவைகளைப் பற்றி முன்பே விளக்கிக் கூறியுள்ளோம்.
இந்தப் போர்கள் எல்லாம் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தின் முற்பகுதியிலே முடிந்துவிட்டன. அவன் இளவரசனாக இருந்தபோது அரசாட்சி பெற்ற உடனே முடிவடைந்துவிட்டன.