பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
53
பெற்ற இவர், மகாயான பௌத்த மதத்தை இலங்கையில் பரவச்செய்தார். இலங்கையில் தேரவாத (ஈனயான), மகாயானச் சமயப் பூசல்கள் ஏற்பட்டன. மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த பேர் போன சிவன் கோயில்களை இடித்து அழித்தான்.
ஸ்ரீமேகவண்ணன் (கி. பி. 304-332)
இவன் இலங்கையின் பழைய தேரவாதப் பௌத்தத்தை ஆதரித்தான். பல பரிவேணைகளையும் விகாரைகளையும் கட்டினான். இவனுடைய ஒன்பதாம் ஆட்சியாண்டில் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தருடைய பல் தாதுவை அநுராதபுரத்தில் வைத்துச் சிறப்புச் செய்தான். வட இந்தியாவை இவன் காலத்தில் ஆட்சி செய்தவன் சந்திரகுப்தன் (கி. பி. 345 - 380). ஸ்ரீமேகவண்ணன், சந்திரகுப்த அரசனிடத்தில் இரண்டு பௌத்தப் பிக்குகளைத் தூது அனுப்பி, புத்தகயாவுக்கு யாத்திரை போகிற இலங்கைப் பௌத்தப் பிக்குகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டான். இவன் இருபத்தெட்டு ஆண்டு ஆட்சி செய்தான் (சூல வம்சம் 37ஆம் பரிச்சேதம் 51 - 99, Culavamsa, Part I Translated by Wilhelm Geiger, 1929). இவனுடைய கல்வெட்டுச் சாசனங்கள் இலங்கையில் கிடைத்துள்ளன. அந்தச் சாசனங்களில் இவ்வரசன் கிரி மேகவண்ண என்றும் கிரி மேகவன என்றும் கூறப்படுகிறான்.
ஜேஸ்ரீட்டதிஸ்ஸன் II (கி. பி. 332-341)
ஜேட்டதிஸ்ஸன், ஸ்ரீமேகவண்ணனுடைய தம்பி. இவன் யானைத் தந்தத்தில் அழகான உருவங்களையும் கலைப் பொருள்களையும் செய்வதில் வல்லவன். அந்தத் தொழிலைப் பலருக்கு கற்பித்தான். இவன் இலங்கையை ஒன்பது ஆண்டுகள் அரசாண்டான் (சூலவம்சம் 37ஆம் பரிச்சேதம் 100 - 104).
புத்ததாசன் (கி. பி. 341-370) இவன் ஜேட்டதிஸ்ஸனுடைய மகன். மருத்துவக் கலையில் வல்லவனான இவன் மனிதரின் நோயைத் தீர்த்ததுமல்லாமல் ஒரு பாம்பின் நோயையும் தீர்த்தானாம். நாட்டில் ஆங்காங்கே மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்தான். மருத்துவருக்கு மருத்துவ விருத்தி நிலங்களைக் கொடுத்தான். யானை, குதிரைகளின் நோய்களையும் போரில் புண்பட்ட வீரர்களின் நோயையும் போக்க வைத்தியர்களை நியமித்தான்.