பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
75
தோட்டங்களை ஒட்டி யாணமாகவும் அணிந்த சோழ நாட்டைக் கைப்பற்றினான்” என்றும் பள்ளன்கோயில் செப்பேடு கூறுகிறது (பள்ளன்கோயில் செப்பேடு, சுலோகம் 4, 5.).
“புகழ்வாய்ந்த திறலையுடையவனும் பகைவர்களின் ஆற்றலை யடக்கும் பலமுள்ளவனுமான சிம்மவர்மனுக்கும் வெற்றி வீரனான சிம்மவிஷ்ணு மகனாகப் பிறந்தான். அவன், கமுகத் தோட்டங்களும் நெல் வயல்களும் நிறைந்துள்ள கவேரன் மகளான காவிரி ஆற்றினால் அலங்கரிக்கப்பட்ட சோழ நாட்டைக் கைப்பற்றினான்” என்று வேலூர்ப்பாளையச் செப்பேடு கூறுகிறது (வேலூர்பாளையச் செப்பேடு, சுலோகம் 10).
இவ்வாறு பல்லவ அரசருடைய செப்பேடுகள் கூறுகின்றன. இவற்றிலிருந்து சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசனுடைய மகனான சிம்மவிஷ்ணு, சோழ நாட்டையாண்ட சிம்மவிஷ்ணு என்னும் அரசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்றும் அறிகிறோம். சிம்மவிஷ்ணு பல்லவன் சோழ நாட்டைச் சோழரிடமிருந்து வென்றுகொண்டானா, களப்பிரரிடமிருந்து வென்று கொண்டானா என்று செப்பேடுகள் கூறவில்லை. களப்பிரரிடமிருந்து சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுவது முற்றிலும் உண்மை. அக்காலத்தில் சோழநாட்டைச் சோழமன்னன் ஆளவில்லை. சங்க காலத்தின் இறுதியில் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டபோது சோழர் அவருக்குக் கீழடங்கியிருந்தார்கள். ஆகவே, சிம்மவிஷ்ணு களப்பிரரிடமிருந்துதான் சோழ நாட்டை வென்றான் என்பது வெளிப்படை. களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த சோழர், பல்லவர் சோழ நாட்டை வென்ற பிறகு பல்லவருக்குக் கீழடங்கினார்கள்.
பாண்டியன் கடுங்கோனும் பல்லவச் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வென்று வீழ்த்தியது ஏறத்தாழ கி.பி. 575 என்று கருதப்படுகிறது. கி. பி 575இல் அல்லது அதற்குச் சற்று முன் பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்றிருக்கவேண்டும் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார் (சதாசிவ பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு. பக்கம் 34). கி.பி. 590 இல் களப்பிரர் வெல்லப்பட்டனர் என்று திரு. நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார் (K.A. N. Sastry, The Pandyan Kingdom). கி.பி. 575 இல் களப்பிரர் வீழ்ச்சியடைந்தனர் என்று கொள்வதே சரி என்று தோன்றுகிறது.