உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3



கி.பி. 450க்கும் 550க்கும் இடையில் களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் இருந்தது என்று திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் கூறுகிறார். பிறகு கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர் களப்பிரரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்று கூறுகிறார் (P.T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929,p.534). அதாவது, கி.பி. 450 முதல் 600 வரையில் 150 ஆண்டு களப்பிரர் ஆட்சி இருந்ததென்று கூறுகிறார். இவர் கூற்று தவறு என்று தோன்றுகிறது. ஏறத்தாழ கி.பி. 250 முதல் 575 வரையில் தமிழ் நாட்டைக் களப்பிரர் ஆண்டனர் என்று கருதுவது தவறாகாது. பாண்டி நாட்டைக் கடுங்கோனும் சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவும் வென்றுகொண்டபோது சேரநாட்டைச் சேர அரசன் களப்பிரரிடமிருந்து வென்றுகொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அந்தச் சேரனது பெயர் தெரியவில்லை. களப்பிரர் தங்கள் இராச்சியத்தைச் சேர, பல்லவ, பாண்டியர்களுக்கு இழந்துவிட்ட பிறகு அவர்கள் பேரரசர் நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்து சிற்றரசர் நிலையை அடைந்தனர். அவர்கள் சோழ நாட்டிலே தஞ்சாவூர், செந்தலை முதலான ஊர்களில் தங்கிச் சிற்றரசர்களாகப் பல்லவ அரசருக்கு அடங்கிவிட்டனர்.

மாமல்லன் (முதலாம் நரசிம்மவர்மன்), இரண்டாம் நந்திவர்மன் ஆகிய பல்லவ அரசர் களப்பிரரை வென்றதாகக் கூறிக்கொள்கின்றனர் (கூரம் செப்பேடு, வரி 15; புல்லூர்ச் செப்பேடு; பட்டத்தால் மங்கலம் செப்பேடு, சுலோகம் 9). சளுக்கிய அரசர்களான முதலாம் விக்கிரமாதித்தன், வியாதித்தன் முதலான அரசர்கள் களப்பிரரை வென்றதாகக் கூறிக்கொள்கின்றனர். இவர்கள் வென்ற களப்பிரர் பேரரசராகத் தமிழ்நாட்டை ஆண்ட களப்பிரர் அல்லர், அரசை இழந்து சிற்றரசர் நிலையையடைந்த பிற்காலத்துக் களப்பிரர் ஆவார்.

பிற்காலத்தில் களப்பிரர் முத்தரையர் என்று பெயர் பெற்றிருந்தனர் என்று அறிகிறோம். முத்தரையர் என்னும் பெயர் சேர, சோழ பாண்டியர் என்னும் மூன்று தரைகளை அரசாண்டவர் என்னும் பொருளுள்ள சொல்லாக இருக்கலாம். முத்தரையர், செந்தலை, தஞ்சாவூர் நாடுகளை யரசாண்டார்கள். முத்தரையர் களப்பிரர் அல்லர் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். "அன்றியும் தமிழ்நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரே யாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று" (பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு. பக்கம் 32)