உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

95


ஆனால், சைன சமயத்தவரும் பௌத்த மதத்தவரும் நாயக- நாயகி பாவத்தை (பேரின்பக் காதலை) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இந்தக் கொள்கைக்கு மாறுபட்டிருந்தனர். சைவ, வைணவ பக்தர்கள் தங்கள் கடவுளை நாயகனாகவும் தங்களை நாயகியாகவும் பாவித்து அகத்துறையமைந்த பாடல்களைப் பாடியது போல சைன, பௌத்த சமய இலக்கியங்களில் காணப்படவில்லை.

பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்புள்ள அகப்பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் மனிதக் காதலைக் கூறுகின்றனவேயல்லாமல் தெய்வ-மனிதக் காதலைக் கூறவில்லை. சைன பௌத்த மதத்தவர் நாயக-நாயகி பக்திக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதது போலவே, சைன,பௌத்தரல்லாத ஏனைய தமிழர்களும் இந்தப் புதிய நாயக- நாயகிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். ஆகையால், இந்தக் கொள்கைக்கு ஆதாரமான நூல் வேண்டியிருந்தது. அந்த ஆதார நூல்தான் இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூல் (இந்த இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூலைப் பற்றி இந்நூலில் இணைப்பு 3இல் காண்க.)

பக்தி இயக்கமும் பேரின்பக் காதல் (நாயக-நாயகி பாவம் கொள்கையும் சைவ, வைணவ மதத்துக்குப் பேருதவியாக இருந்தன. இந்தக் கொள்கைகள் சைன, பௌத்த மதங்களை வீழ்த்திச் சைவ வைணவ மதங்களை வளர்ப்பதற்குப் பேருதவியாக இருந்தன. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் சைவ, வைணவ மதங்களை ஓங்கி வளரச் செய்யவும் சைன, பௌத்த மதங்களைத் தாழ்த்தவும் செய்ததற்கு முதற்காரணமாக இருந்தது பக்தி இயக்கந்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை.