96
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
களப்பிரர் காலத்தில் தமிழ்மொழி
கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழிக்கு அவர்கள் ஆக்கம் அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால்,களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழர், தமிழ் மொழியைப் புதிய முறையில் வளர்த்தார்கள்.இந்த முயற்சியில் அக் காலத்துத் தமிழர் மதபேதம் பாராட்டாமல் ஒன்றாக இணைந்து தாய்மொழியை வளர்த்தனர். பௌத்த, சமண, சைவ, வைணவ சமயத்துத் தமிழ்ப் புலவர் அனைவரும் தமிழை வளர்த்தார்கள்.புது வகையான பாக்களும் புது வகையான இலக்கியங்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உண்டாக்கப்பட்டன. அந்த வளர்ச்சி புதுமையான வளர்ச்சியாகவே இருந்தது.
வட்டெழுத்து
சங்க காலத்தில் வழங்கி வந்த பிராமி எழுத்து சங்க காலத்தின் இறுதியில் மாற்றம் அடையத் தொடங்கியது. இந்த மாற்றம் எழுது கருவிகளின் மூலமாக ஏற்பட்ட மாற்றம். பனையோலையும் எழுத்தாணியுமே அக்காலத்து எழுது கருவிகளாக இருந்தபடியால் இந்த மாற்றம் ஏற்பட்டது. களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமி எழுத்தின் மாற்றம் முழுமாற்றமாகிப் பையப்பையப் புதுவகையான எழுத்தாயிற்று. இப்புது வகையான எழுத்து வட்டெழுத்து என்று பெயர் பெற்றது. வட்டெழுத்து தமிழ் நாடெங்கும் பரவி வழங்கிற்று. சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் தொண்டை நாட்டிலும் வட்டெழுத்து நெடுங்காலம் வழங்கிவந்தது. வட்டெழுத்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கத்தில் இருந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் வட்டெழுத்து வழங்கியது என்பதில் ஐயம் இல்லை.
பிராகிருத மொழியையும் சமஸ்கிருத மொழியையும் எழுதுவதற்காகப் புது வகையான கிரந்த எழுத்துகளைப் பௌத்தரும் சைனரும் உண்டாக்கினார்கள். அந்தக் கிரந்த எழுத்து தென்னிந்தியாவில் குமரி முதல் விந்தியம் வரையில் வழங்கிவந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பிராகிருத, சமஸ்கிருத மொழிச் சொற்கள் பௌத்த, சமண சமயங்களின் வழியாகத் தமிழில் கலந்துவிட்டன.