100
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
குறிப்பு: முசிறிப் பட்டினத்துக்கு முயிரிக்கோடு என்றும் மகோதை என்றும் மகோதைப் பட்டினம் என்றும் சங்ககாலத் துக்குப் பிறகு பெயர் கூறப்பட்டது.
வைக்கரை
இது முசிறிக்குத் தெற்கேயிருந்த துறைமுகப்பட்டினம். கோட்ட யத்துக்கு அருகிலே இருந்தது. இந்தத் துறைமுகத்தைத் தாலமி என்பவர் பக்கரே (Bakarei) என்று கூறுகிறார். இந்தத் துறை முகத்தைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை.
மேல்கிந்த
தாலமி என்பவர் இதை மேல்கிந்த (Molkynda) என்றும், பெரிப்ளூஸ் என்னும் நூல் நெல்கிந்த என்றும், பிளைனி என்பவர் நியாசிந்த என்றும் கூறுகின்றனர். தமிழில் இதை என்ன பெயரிட்டுக் கூறினார்கள் என்பது தெரியவில்லை. இது வைக்கரைக்குத் தெற்கே இருந்தது. இதைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.
விழிஞம்
இலங்கொன் (Elankon) என்னும் துறைமுகப்பட்டினத்தைத் தாலமி என்னும் யவனர் கூறியுள்ளார். இது ஆயோய் (ஆய்) நாட்டில் இருந்ததென்று கூறுகின்றார். ஆய் நாடு பாண்டிய நாட்டில் இருந்தது. பொதிகை மலையைச் சூழ்ந்திருந்தது ஆய்நாடு. ஆய் மன்னர் பாண்டியருக்குக் கீழடங்கிச் சிற்றரசராக இருந்தார்கள். ஆய் நாட்டில் இருந்த துறைமுகத்தைத் தாலமி இலங்கொன் என்று குறிப்பிடுவது விழிஞம் என்னும் துறைமுகப் பட்டினமாகும். விழிஞம் மிகப் பழமையான சரித்திரப் புகழ் பெற்ற துறைமுகப்பட்டினம்.