146
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
ஆரிய தெய்வ வழிபாட்டைத் திராவிடரும் பையப் பைய ஏற்றுக் கொண்டனர். திராவிடருடைய தெய்வங்களாகிய சிவன், மாயோன் முதலிய தெய்வங்களுடன் ஆரியருடைய உருத்திரனும் விஷ்ணுவும் இணைக்கப்பட்டது போல, வேந்தன் என்னும் திராவிடத் தெய்வத்துடன் இந்திரன் என்னும் ஆரியத் தெய்வம் இணைக்கப்பட்டது. இவ்விதத் திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், சந்திரகுப்த மௌரியனும் அவன் பேரனான அசோக சக்கரவர்த்தியும் அரசாண்ட காலத்தில் தொடங்கியிருக்கக்கூடும். இவ்வாறு வேந்தன் என்னும் தெய்வத்துடன் இந்திரன் என்னும் தெய்வம் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டது. பின்னர் சில நூற்றாண்டுக்குப் பிறகு இரு தெய்வங்களும் மறக்கப்பட்டு மறைந்து போயின.
வேந்தன் தெய்வம் இந்திரனாக்கப்பட்டது மூன்று ஆரிய மதத்தினரின் தொடர்பினால் என்பது தெரிகிறது. பௌத்தர் ஜைனர் வைதீகர் ஆகிய மூன்று ஆரிய மதத்தாரின் தொடர்பினால் தமிழரின் வேந்தன், இந்திரனாக்கப்பட்டான். பௌத்த ஜைன மதங்களின் சிறு தெய்வங்களில் இந்திரனுக்கு முதன்மையான இடம் உண்டு. அது போலவே வேதத்தை முதன்மையாகக் கொண்ட வைதிக மதத்தாருக்கும் இந்திர வழிபாடு உண்டு. ஆனால், வைதிக மதத்தார் இந்திரனை யாகஞ் செய்து வழிபட்டனர். பௌத்த ஜைன மதத்தார் தங்களுடைய இந்திரனை யாகத்தினால் வழிபடவில்லை. மூன்று ஆரிய மதத்தாருக்கும் உடன்பாடான இந்திரன், தமிழரின் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டுத் தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழர் ஏற்றுக்கொண்டு வழிபட்ட இந்திரன் பௌத்த இந்திரனாகத் தெரிகிறான். கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்ற இந்திர விழாவிலே, இந்திரன் யாகஞ் செய்து பூசிக்கப் படவில்லைதிருவிழா செய்து பூசிக்கப்பட்டான். அந்த இந்திர விழாவில் பௌத்தருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்திர விழாவை, ஒரு ஆண்டு சோழ அரசன் நிறுத்தினபடியினாலே, பௌத்தத் தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் சினம்கொண்டு அந்நகரத்தை அழித்தது என்று மணிமேகலை என்னும் பௌத்த நூல் கூறுகிறது. எனவே, தமிழ் நாட்டில் தமிழர் பிற்காலத்தில் வழிபட்ட இந்திரன் வைதீக மதத்து ஆரிய இந்திரன் அல்லன் என்பது தெரிகிறது.