பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
147
பௌத்த மதத்தில் இந்திரனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்திரன் பௌத்த மதத்தையும் பௌத்த தருமத்தையும் உலகத்தில் நிலைநிறுத்துகிறான் என்பது பௌத்தர் கொள்கை. மணிமேகலை முதலிய சிறு தெய்வங்களை உலகத்திலே ஒவ்வொரு இடத்தில் அமர்த்திப் பௌத்த மதத்தை அவன் காத்து வருகிறான் என்று பௌத்த மத நூல்கள் கூறுகின்றன. பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று ஆரிய மதங்களுக்கும் உடன்பாடாகிய இந்திரன், பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டான் என்பதும், ஆனால் அவன் பௌத்தமத இந்திரனாகக் கருதப்பட்டான் என்பதும் தெரிகின்றன. பிற்காலத்தில் இந்திரனும் வேந்தனும் ஒரே தெய்வமாகக் கற்பிக்கப்பட்ட போதிலும், ஆரியக் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் தமிழர் வணங்கிய மருதநிலக் கடவுள் வேந்தன் என்று பெயர் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியத்திலிருந்து தெரிகிறது.
திராவிட வருணனும் ஆரிய வருணனும்
இனி வருணனைப்பற்றி யாராய்வோம். வருணன், பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலமக்கள் வணங்கிய தெய்வம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியங் கூறுகிற வருணன், இக்காலத்தில் பலரும் தவறாகக் கருதுவதுபோல, வைதீக ஆரியர் வழிபட்ட வருணன் அல்லன், தொல்காப்பியம் கூறுகிற வருணனை வைதீக மதத்தாரின் வேதத்தில் கூறப்படுகிற வருணன் என்று கருதுவது பெரும் பிழையாகும். தமிழர் வணங்கிய வருணன் ஆரியக் கடவுள் அல்லன். ஆரிய வேதத்தில் கூறப்படுகிற வருணன் திராவிடக் கடவுளாகிய வருணனே. ஆய்த்தோய்ந்து பாராமல் மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்கு வருணன் ஆரியர் தெய்வம் என்று தோன்றினாலும் ஆதிகாலத்தில் அது ஆரிய தெய்வம் அன்று. ஆரியர் அயல் நாட்டிலிருந்து இந்தியா தேசமாகிய பாரத தேசத்தில் புகுந்த போது, வட இந்தியாவில் வாழ்ந்திருந்த திராவிடருடன் கலக்க வேண்டியவரானார்கள். அக்காலத்து வடநாட்டுத் திராவிடருக்கும் புதிதாக வந்த வேதகால ஆரியருக்கும் அந்தத் தொடக்கக் காலத்திலே கலாசாரக் கலப்பு ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட கலப்பினாலே வடநாட்டில்வாழ்ந்திருந்த திராவிடரின் தெய்வமாகிய வருணனை ஆரியர் தங்களுடைய தெய்வமாக ஏற்றுக் கொண்டனர்.