உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

173


11. சங்க காலத்து நகரங்கள்*

1. சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டினம்

கடைச்சங்க காலத்தில் சோழநாட்டின் தலைநகரம் உறையூராகவும் அதன் முக்கிய துறைமுகப்பட்டினம் காவிரிப்பூம்பட்டினமாகவும் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தின் நகர அமைப்பு கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் எவ்வாறு இருந்தது என்பதை இங்கு ஆராய்வோம்.

காவிரிப்பூம்பட்டினத்துக்குப் புகார் என்றும் பூம்புகார் என்றும் பெயர்கள் உள்ளன. காகந்தி என்றும் சம்பாபதி என்றும் வேறு பெயர்களும் உண்டு. பாலி மொழியில் எழுதப்பட்ட மிகப் பழமையான புத்த ஜாதகக் கதைகளிலே அகித்தி ஜாதகத்தில் இந்தப் பட்டினம் டமிள நாட்டுக் கவீரபட்டணம் என்று கூறப்படுகிறது. (டமிள நாடு - தமிழ் நாடு) போதிசத்துவராகிய புத்தர், தமது பழம் பிறப்பிலே அகித்தி முனிவராகப் பிறந்து காவிரிப்பூம் பட்டினத்திலே ஒரு தோட்டத்திலே தங்கித் தவஞ் செய்திருந்தார் என்று அதில் கூறப்படுகிறார். கி.மு. முதல் நூற்றாண்டிலே இலங்கையை அரசாண்ட கமுனு (துட்டகைமுனு) என்னும் அரசனுடைய மனைவி, அவளுடைய முற்பிறப்பிலே காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு கப்பல் தலைவனுடைய குடுத்பத்தில் பிறந்திருந்தாள் என்று கூறப்படுகிறாள். இலங்கை நாட்டிலே வழங்குகிற இரசவாகினி என்னும் நூலிலே, காவிப்பூம்பட்டினத்தில் இருந்த பௌத்தப் பள்ளிகள் கூறப்படுகின்றன. பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலாசிரியர் காவிரிப்பூம்பட்டினத்தைக் 'கமரா' என்று கூறுகிறார். டாலமி என்னும் யவனர் இப்பட்டினத்தை 'கபேரிஸ் எம்போரியன்' என்று எழுதியிருக்கிறார்.

இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு, காவிரிப்பூம் பட்டினம் உலகப் புகழ்பெற்ற துறைமுகப் பட்டினமாக விளங்கிற்று. கீழ் நாடுகளிலிருந்தும் மேல் நாடுகளிலிருந்தும் வந்த அயல் நாட்டுக் கப்பல்


  • மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்எழுதிய சங்க கால தமிழக வரலாற்றில் சிலசெய்திகள் (1970) என்னும் தலைப்பில் வெளியிட்ட நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.