உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

174

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


வாணிகர் சந்திக்கும் இடமாக இப்பட்டினம் இருந்தது. அவர்களில் குறிப்பிடத் தக்கவர் யவனர் எனப்படும் கிரேக்கர் ஆவர். புகார் நகரத்துக் கப்பல் வாணிகர் இங்கிருந்து கப்பல்களில் பண்டங்களை ஏற்றிக்கொண்டு ஈழம் (இலங்கை), சாவகம் (ஜாவா முதலிய கிழக்கிந்தியத் தீவுகள்), காழகம் (பர்மா தேசம்), கடாரம் (மலாய தேசம்) முதலிய நாடுகளில் சென்று வாணிகம் புரிந்தனர்.

சீகாழிக்குத் தென்கிழக்கே ஒன்பது மைல்தூரத்திலே காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்திலே பேர்போன காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. அப்பட்டினம் இப்போது சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது.

கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் காவிரிப்பூம்பட்டினம் எவ்வாறு இருந்தது என்பதைச் சங்ககாலத்து நூல்களில் இருந்து ஆராய்வோம்.

கீழ்க்கடல் என்றும் குணகடல் என்றும் தொடுகடல் என்றும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த இப்போதைய வங்காள குடாக்கடலில், காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர்முகத்தில், காவிரி ஆற்றுக்கு வடகரையில் புகார்ப் பட்டினம் அமைந்திருந்தது. காவிரி ஆற்றின் புகர் முகத்தில் அமைந்திருந்தபடியால், இப்பட்டினத்துக்குப் புகார்ப்பட்டினம் என்றும் புகார் என்றும் பூம்புகார் என்றும் பெயர்கள் அமைந்தன.

இந்த நகரத்தின் சுற்றளவு நான்கு காதம் என்று கூறப்படுகிறது.

'பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்'.

என்று சிலப்பதிகாரம் (5ஆம் காதை 131 - 134) கூறுவதிலிருந்து இப்பட்டினம் நான்கு காத சுற்றளவிருந்தது என்பது பெறப்படுகின்றது.

('காத நான்கும் -ஊர் சூழ்ந்த நாற்காத வட்டகையும்' என்பது அரும்பதவுரையாசிரியர் உரை. 'காத நான்கும் என முற்றும்மை கொடுத்தலானே ஊர் நாற்காத வட்டகை என்பது உணர்க்’. அடியார்க்கு நல்லார் உரை.)

காதம் என்பது ஏறக்குறை பத்து மைல். புகார் நகரம் நாற்காத வட்டகையாக இருந்தது என்பதனாலே அது நாற்பது மைல் சுற்றள