212
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
கண்டு மகிழ்ந்தார்கள்.17 இந்தப் பொன்மாளிகையிலேதான், சேர அரசர் அரசியல் நடத்திய 'வேத்தியல் மண்டபம்' இருந்தது.18 அரண்மனைக்கு அருகிலேயே சிவபெருமான் கோயிலும் அறிதுயில் அமர்ந்தோன் (திருமால்) கோயிலும் இருந்தன.19
பொன்மாளிகைக்குத் தெற்கே பேரியாற்றின் கரைமேல் இன்னோரு மாளிகை இருந்தது. அதற்கு 'வெள்ளிமாடம்' என்பது பெயர்.20 இந்த வெள்ளி மாளிகை இலவந்திகைச் சோலையில் அமைந்திருந்தது.21 'விளக்கு இலவந்தி வெள்ளிமாடம்'. இலவந்திகைச் சோலைக்கு நீராவிச் சோலை என்றும் பெயருண்டு. இலவந்திகை அல்லது நீராவிச் சோலை அரச குடும்பத்துக்குரிய சோலை. அதில், அவர்களைத் தவிர ஊர்ப் பொதுமக்கள் நுழையக் கூடாது. வெள்ளி மாடத்தில் சேர அரசரின் குடும்பம் வாழ்ந்து வந்தது. செங்குட்டுவன், இளவேனிற் காலத்தில், மலையிலிருந்து பெரியாறு இழிந்த இடத்திற்குச் சென்றபோது, வெள்ளி மாடத்திலிருந்து புறப்பட்டுப் போனான்.22
இதுகாறும் நகரத்தின் அமைப்பைப் பற்றிக் கூறினோம். இனி நகரத்தைச் சூழ்ந்திருந்த கோட்டை மதில்களை பற்றிப் பார்ப்போம்.
கோட்டை மதில்கள்
வஞ்சிமா நகரத்தைச் சூழ்ந்து கோட்டை மதில்களும் அகழியும் காவற்காடும் இருந்தன. கோட்டை மதில் காவல் உடையதாக இருந்தபடியால் 'கடிமதில்' என்று கூறப்பட்டது.23 மதிலைச் சூழ்ந்து, மதிலுக்கு வெளியே அகழி இருந்தது. அகழியில் மீன்களும் முதலைகளும் இருந்தன; தாமரை அல்லி முதலான நீர்ப்பூக்களும் இருந்தன.24 நகரத்தில் இருந்து தூம்புகளின் வழியாகவும் சுருங்கைகளின் வழியாகவும் வந்த கழிவுநீர் அகழியில் வந்து விழுந்தது.25 (சங்க காலத்து மதுரை நகரத்தில், கழிவு ..... சுகாதார அமைப்போடு இருந்ததை அறிகிறோம். வஞ்சிமா நகரத்தின் தெற்கே சுள்ளியாறு (பேரியாறு) பாய்ந்தபடியால் அந்த ஆறே அகழியாக அமைந்திருந்தது. மற்றக் கிழக்கு மேற்கு வடக்குப் பக்கங்களில் கோட்டைச் சுவரைச் சூழ்ந்து அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. (தரைப்படம் காண்க). அகழிக்கு உள்பக்கத்தில் நகரத்தைச் சூழ்ந்து மதிற் சுவர்கள் இருந்தன. இந்தச் சுவர்கள் புற மதில்களாகும். இந்தப் புறமதில்களின் மேலே போர்க் கருவிகளும் இயந்திரப் பொறிகளும் வைக்கப்பட்டு காவலுடையதாக இருந்தன.26 அகழி சூழ்ந்த கோட்டைமதிலின்மேல் போருக்குரிய