214
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
கோட்டையின் குணவாயிலுக்கு அருகில், கோட்டைச் சுவருக்கு வெளியே ஒரு சோலை இருந்தது. அங்குப் பலசமயத்துத் துறவிகள் தங்கியிருந்தனர். சைவ வைணவக் கோயில்களும் பௌத்த சமணப் பள்ளிகளும் ‘நற்றவ முனிவரும் கற்றடங்கினவரும்' மதிலுக்கு வெளியேயிருந்த சோலையில் இருந்தனர்.31 இந்த இடத்துக்குக் குணவாயிற் கோட்டம் என்பது பெயர். இந்தக் குணவாயிற் கோட்டத்தில் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ அடிகள், துறவு பூண்டுத் தங்கியிருந்தார்.32 குணவாயில் கோட்டத்தைப் 'பகல் செல்வாயில்' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.33 (பகல் செல் வாயில்-சூரியன் போகிற வழி; கிழக்குத்திசை. குணவாயில் - கிழக்கு வாயில்-குணக்கு-கிழக்கு) சங்க காலத்துக்குப் பிறகு, முசிறித் துறைமுகப்பபட்டினமும் வஞ்சி மாநகரமும் மறைந்துபோன பின்னரும் குணவாயிலும், குணவாயிற் கோட்டமும் அழியாமல் இருந்தன. பிற்காலத்தில் மலையாளிகள் குணவாயிற் கோட்டத்தை ‘த்ருக்கணா மதிலகம்' என்று கூறினார்கள். இது, திருக்குண மதிலகம் என்பதன் சிதைவு. ‘த்ரு' என்பது திரு என்னும் சொல்லின் சிதைவு. 'கணா' என்பது குண என்பதன் சிதைவு. மதிலகம் என்பது கோட்டை மதில் உள்ள இடம் என்னும் பொருளுள்ளது. வஞ்சி நகரம் அழிந்துபோன பிறகு, அதன் பகுதியாக எஞ்சியிருந்த குணவாயிலும் அதன் அருகில் இருந்த கோட்டமும் 'த்ருக்கணா மதிலகம்' என்று மலையாளிகளால் கூறப்பட்டன. இந்த இடத்தைப் பற்றி இக்காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து கட்டுரை எழுதியுள்ளனர்.34
குணவாயில் கோட்டத்தில் பலசமயக் கோயில்களும் பல சமயத்துத் துறவிகளும் சமயத் தத்துவங்களைக் கற்ற சமயச் சான்றோர்களும் இருந்தனர். இங்கிருந்த சமயவாதிகளிடத்தில் மணிமேகலை சமயக் கணக்குகளை (சமயத் தத்துவங்களைக்) கேட்டறிந்தாள் என்பதை மணிமேகலை காவியத்திலிருந்து அறிகிறோம். மணிமேகலை 27- ஆம் காதையின் தலைப்புக்கு விளக்கம் கூறுகிற கொளு, 'வஞ்சிமா நகர்ப்புறத்துச் சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட பாட்டு' என்று கூறுகிறது. இதனாலே, குணவாயிற் கோட்டத்தில் இருந்த பல சமயவாதிகளிடத்தில், அவள் பல்வேறு சமயக் கொள்கைகளைத் தெரிந்து கொண்டாள் என்பது விளங்குகிறது.
குணவாயிற் கோட்டத்துக்கு அருகிலேயே, சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம் அமைத்தான் என்பதை மணி மேகலையிலிருந்து குறிப்பாக அறிகிறோம். காவிரிப்பூம்பட்டினம்