74
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
யவனர் கப்பல்களில் வந்து அங்கு வாணிகம் செய்தார்கள். அதற்குச் சான்றாக, அத்துறைக்கு மேற்கேயுள்ள பழைய பட்டின மாகிய நெல்லூரில் உரோம் தேசத்துப் பழங்காசுகள் கிடைத் துள்ளன. உரோம் தேசத்துப் பழங்காசுகள் அடங்கிய ஒரு பானைப் புதையல் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது. கொல்லத் துறைத் துறைமுகத்துக்கு அருகிலே யுள்ள நெல்லூரில் கிடைத்த இந்தப் புதையல் அக்காலத்தில் யவன வாணிகர் இங்கு வந்து வாணிகஞ் செய்ததைத் தெரிவிக்கின்றது.1
தொல் பொருள் ஆய்வாளர் அரிக்கமேட்டை அகழ்ந்து பார்த்துக் கண்டுபிடித்தது போல, கொல்லத் துறையான இவ்விடத்தையும் அகழ்ந்து பார்த்தால் இங்கும் பழைய பொருள்கள் கிடைக்கக் கூடும். கிடைக்கும் பொருள்களிலிருந்து வரலாற்றுச் செய்திகளை அறிய இயலும். இதுவரையில் இங்கு அகழ் வாராய்ச்சி நடக்கவில்லை. தொல்பொருள் ஆய்வாளர் இனியேனும் இந்த இடத்தை அகழ்ந்து ஆராய வேண்டும்.
எயிற் பட்டினம் (சோ பட்டினம்)
சங்க காலத்திலே தொண்டை நாட்டில் முக்கியத் துறைமுகப் பட்டினமாக இருந்தது எயிற் பட்டினம். இதற்குச் சோ பட்டினம் என்றும் பெயர் இருந்தது. எயில் என்றாலும் சோ என்றாலும் மதில் என்பது பொருள். இந்தத் துறைமுகப் பட்டினத்தைச் சூழ்ந்த மதில் இருந்தபடியால் இப்பெயர் பெற்றது. இது பிற்காலத்தில் மரக்காணம் என்று பெயர் பெற்றது. பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க மொழி நூல் இந்தப் பட்டினத்தைச் 'சோ பட்மா' என்று கூறுகிறது. சோ பட்மா என்பது சோ பட்டினம் என்பதன் மரூஉ.
இடைக்கழி நாட்டுநல்லூர் நத்தத்தனார் தாம் பாடிய சிறுபாணாற்றுப் படையில் இந்தப் பட்டினத்தைக் குறிப்பிடுகிறார். “மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய, பனிநீர்ப் படுவிற் பட்டினம்" (சிறுபாண். 152-153) என்று கூறுகிறார்.
‘ஓங்கு நிலை யொட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரைமா விறகு’
என்று (சிறுபாண், 154-155). இவர் கூறியபடியால் விரைமரம் (அகில் கட்டை) இங்கு இறக்குமதியான பொருள்களில் ஒன்று எனத் தெரிகிறது. இந்த விரை மரம், கடலில் இருந்து வந்தது என்று கூறுகின்றபடியால் இது சாவக நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரிகிறது. அகிற்-