பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
75
கட்டை, சந்தனக் கட்டை முதலான பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டிலிருந்து வந்தன. முடிச்சு உள்ள அகில் மரக்கட்டை, படுத்துத் தூங்கும் ஒட்டகம் போன்ற உருவமாக இருந்தது என்று கூறுகிறார்.
'வாளைலுப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படைப்பை
மாடமோங்கிய மணல் மலி மறுகில்
பரதர் மலித்த பல்வேறு தெருவின்' (பெரும்பாண், 320-323)
என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகிறார். இதனால், இத்துறைமுகப்பட்டினத்தில் நாவாய்களில் வந்து இறங்கின பொருள்களில் குதிரைகளும் வடஇந்தியப் பொருள்களும் இருந்தன என்று கூறுகிறார். வடவளம் (வடநாட்டுப் பொருள்கள்) இன்னவை என்று இவர் கூறவில்லை. பரதர் (கப்பலோட்டிகள்) மலிந்த தெருக்கள் இங்கு இருந்தன என்று கூறுகிறபடியால் கப்பல் வாணிபம் இங்குச் சிறப்பாக நடந்தமை தெரிகிறது. இங்கிருந்த கலங்கரை விளக்கைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் சிறப்பாகக் கூறுகிறார். பட்டினப்பாலையில் காவிரிப் பூம்பட்டினத்தைப் பாடினவரும் இவரே). கடலில் ஓடுகிற கப்பல்கள் இராக் காலத்தில் துறைமுகம் உள்ள இடத்தையறிந்து கரைசேர்வதற்காகக் கலங்கரை விளக்குகள் துறைமுகங்களில் அமைப்பது வழக்கம் (கலம் = மரக்கலம், நாவாய். கரை - அழைக்கிற, கூவுகிற. விளக்கம் விளக்கு நிலையம்). எயிற் பட்டினத் துறைமுகத்திலிருந்த கலங்கரை விளக்கை இவர் இவ்வாறு கூறுகிறார்.
'வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்தியை வேற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை'(பெரும்பாண், 346-350)
கலங்கரை விளக்கு நிலையம் உயரமான கட்டடமாக (வானம் ஊன்றிய மதலை போல) இருந்தது. அது சாந்து (சுண்ணம்) பூசப்பட்டுத் தள வரிசையுள்ளதாக (வேயாமாடமாக) இருந்தது. அதன் உச்சியில் இராக்காலத்தில் தீயிட்டு எரித்தார்கள். உச்சியில் ஏறி விளக்கு ஏற்றுவதற்கு (தீ ஏற்றுவதற்கு) ஏணிப்படிகள் இருந்தன. இவ்வாறு கலங்கரை விளக்கின் அமைப்புக் கூறப்படுகின்றது.