உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகத்திலும் அக்காலத்தில் கலங்கரை விளக்கு நிலையம் கட்டப்பட்டிருந்ததை இளங் கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். ‘இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்’ (கடலாடு காதை, 141) இதற்குப் பழைய அரும்பத உரையாசிரியர் பொருள் கூறுவது இது. ‘கலங்கரை விளக்கம் - திக்குக் குறிகாட்டிக் கலத்தை (நாவாய்களை) அழைக்கிற விளக்கம்’ இன்னொரு உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், ‘நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு’ என்று உரை எழுதியுள்ளார்.

துறைமுகங்கள் தோறும் கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டிருந்தன. அவை உயரமாக மணல் மேட்டின் மேல் கட்டப்பட்டிருந்தன. மீகாமர் கலங்கரை விளக்கின் உதவியினால் மரக் கலங்களை இராக் காலத்தில் துறைமுகங்களுக்கு ஓட்டினார்கள். கலங்கரை விளக்குக்கு மாடவொள்ளெரி என்ற பெயரை மருதன் இளநாகனார் கூறுகிறார்.

'உலகுகிளர்ந் தன்ன உருகெழுவங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடுயர் திணிமணல் அகன்றுறை நீகான்
மாடவொள்ளெரி மருங்கறிந்து ஓய்யா
(அகம், 255:1-6)

இதனால் எயிற்பட்டினம் முதலான துறைமுகங்களில் கலங்கரை விளக்குகள் இருந்தமை தெரிகிறது. எயிற் பட்டினத் துறை முகத்தைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.

அரிக்கமேடு (பொதவுகே)

எயிற் பட்டினத்துக்கு (மரக்காணத்துக்குத் தெற்கே ஒரு துறைமுகம் சங்ககாலத்தில் இருந்தது. அது இப்போதைய புதுச்சேரிக்குத் தெற்கே இரண்டு மைல் தூரத்தில் இருந்தது. அதன் பெயர் இன்னதென்று தெரியவில்லை. சங்கச் செய்யுட்களிலும் அத்துறைமுகத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இப்போது அந்த இடம் அரிக்கமேடு என்று கூறப் படுகிறது. அது கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்த யவனருடைய பண்டகசாலையாக இருக்கவேண்டும் என்று சமீப காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியினால் தெரிகிறது. பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூல், தமிழ்நாட்டின் கிழக்குக் கரையில் காமராவுக்கு