உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

77


(காவிரிப்பூம்பட்டினத்துக்கு) வடக்கே 60 மைல் தூரத்தில் போதவுகே (Podouke) என்னும் பட்டினத்தைக் குறிக்கிறது. அந்தப் போதவுகே இந்த அரிக்கமேடாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. உரோம் சாம்ராச்சியத்தை ஆட்சிசெய்த அகுஸ்தஸ் (கி.மு. 23-க்கும் கி.பி. 14-க்கும் இடையில் அரசாண்டவன்) காலத்தில் தமிழ்நாட்டுக்கும் ரோமாபுரிக்கும் கடல் வாணிகம் விரிவாக்கப் பட்டது. அக்காலத்தில் அரிக்கமேடு, யவன வாணிகரின் பண்டக சாலையாக அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் சிறப்பாக இருந்த இந்தத் துறைமுகம் பிற்காலத்தில் மண் மூடிமறைந்து போயிற்று. சமீப காலத்தில் 1945இல் இந்த இடம் தொல் பொருள் ஆய்வுத்துறையினரால் அகழ்ந்தெடுக்கப்பட்டு ஆராயப்பட்டது. இங்கே கிடைத்த பல பொருள்களிலிருந்து இந்த இடம் கி.பி. முதற் நூற்றாண்டில் யவனருடைய பண்டக சாலையாக இருந்தென்பது தெரிகிறது.

கி.பி. 45-க்கும் 50-க்கும் இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்டு, மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பாண்டங்களும், அம்போரெ என்னும் மது (ஒயின்) வைக்கும் சாடிகளும் இங்குக் கண்டெடுக்கப்பட்டன. இவை உடைந்து கிடந்தன. அக்காலத்து அரசர், யவனர் கொண்டு வந்த மதுபானத்தை யருந்தினார்கள் என்பது நக்கீரர் பாட்டினால் தெரிகிறது. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை அவர் இவ்வாறு வாழ்த்துகிறார்.

'யவனர், நன்கலம் தந்ததண் கமழ்தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
ஆங்கினி தொழுகுமதி ஓங்குவாள் மாற'
(புறம், 56:18-21)

நக்கீரர், யவனர் கொண்டுவந்த 'தண் கமழ் தேறலை'க் கூறுவதற்கு ஏற்பவே யவனருடைய மதுச்சாடிகள் அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சியில் அகப்பட்டுள்ளன.

சிவப்புக் களிமண்ணால் செய்யப்பட்ட யவன விளக்கின் உடைந்த துண்டுகளும் அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்டன. சங்க லக்கியங்களிலே யவன விளக்குகள் கூறப்படுகின்றன. யவன விளக்கை நக்கீரர் கூறுகிறார்.