உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

10. ஆனைமலை பிராமி எழுத்து

மலை

மதுரையிலிருந்து மேலூருக்குப் போகிற சாலையில் ஐந்து கல் அளவில் ஆனைமலை இருக்கிறது. இந்த மலை பெரிய கற்பாறை யினால் அமைந்துள்ளது. இந்த மலைப்பாறையின் உருவ அமைப்பு யானையொன்று தன்னுடைய முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு அக் கால்களின் நடுவே தும்பிக்கையை வைத்திருப்பது போலக் காணப்படுகிறபடியால் இதற்கு யானை என்று பெயர் உண்டாயிற்று. யானை மலைக்குன்றில் சில இடங்களிலே சமண சமய தீர்த்தங்கரரின் திருமேனிகளும் வட்டெழுத்துச் சாசனங்களும் காணப் படுகின்றன. இவை கி.பி. 7,8ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. இந்த மலையின் அடிவாரத்தில் நரசிங்கமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் பாண்டியனுடைய அமைச்சனாக இருந்த மாறங்காரி கி.பி. 770 இல் நரசிங்கப் பெருமானுக்கு ஒரு குகைக் கோயிலை அமைத்தான் என்று அங்குள்ள வட்டெழுத்து கிரந்த எழுத்துச் சாசனங்கள் கூறுகின்றன.

பிற்காலத்தில் இந்த மலையைப் பற்றிப் புராணக் கதைகள் கற்பிக்கப்பட்டன. சமண சமய முனிவர் தங்களுடைய மந்திர சக்தியினால் ஒரு பெரிய யானையை உண்டாக்கி அதைப் பாண்டிய னுடைய மதுரை நகரத்தை அழித்துவிட்டு வரும்படி ஏவினார்களாம். அந்தப் பெரிய யானை மதுரையை யழிக்க வருவதைக் கண்ட பாண்டியன் சொக்கப் பெருமானை வேண்டிக் கொள்ள அவர் நரசிங்க அம்பு எய்து யானையைக் கொன்றாராம். விழுந்த யானை கல்லாகச் சமைந்துவிட்டதாம். இந்தக் கதை திருவிளையாடற் புராணங்களில் கூறப்படுகின்றன.

இந்த யானைமலை மேல் உயரத்திலுள்ள இயற்கையான குகையும் அக் குகை வாயிலின்மேல் பொறிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்தும் நம்முடைய ஆராய்ச்சிக்கு உரியவை. மலையுச்சியிலுள்ள குகைக்குச் செல்வது கடினமானது. குகையின் நீளம் 23 அடி குகைக் குள்ளே முனிவர் இருப்பதற்காகக் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குகையின் வாயிலுக்கு மேலேயுள்ள பாறையின் ஓரத்தில், மலை நீர் குகைக்குள்ளே விழாதபடி பக்கங்களில் வழிந்து போகும்படி