உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. கீழை வளவு பிராமி எழுத்து

மதுரை வட்டத்து மேலூரிலிருந்து ஏழு கல் தொலைவில் கீழை வளவு இருக்கிறது. கீழை வளவுக்கும் கீழூருக்கும் இடை நடுவில் தாழ்வான குன்றுத் தொடர்கள் உள்ளன. பாறைகளிலே தீர்த்தங்கரர் திருமேனி உருவங்களும் அவற்றின் கீழே வட்டெழுத்துச் சாசனங் களும் காணப்படுகின்றன. இவை இடைக்காலத்தில் அமைக்கப் பட்டவை. இங்கள்ள குகை ஒன்றிலே கற்படுக்கைகளும் பிராமிக் கல் வெட்டெழுத்தும் உள்ளன. இவை 1903ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டு, அவ்வாண்டு சாசனத் தொகுப்பில் 135ஆம் எண்ணுள்ளதாகப் பிராமி சாசனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே முதன் முதலாகக் கண்டு பிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டு இதுவே.

குகை வாயிலின் மேலேயுள்ள பாறையில் பதினைந்தடி உயரத்தில் இந்தப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துக்க ளின் வரிவடிவம் இவை:

-

இந்த எழுத்துக்களில் சில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப் பட்டுள்ளன. வலப்புறத்திலிருந்து ஐந்தாவது எழுத்தும், ஆறாவது எழுத்தும், பதினொன்றாவது எழுத்தும், பன்னிரண்டாவது எழுத்தும் தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு.3 அல்லது 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இந்த எழுத்துக்களை அறிஞர் எவ்வாறு படித்துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

தொடக்கத்தில் உள்ள 'உபாசா' என்பது உபாத்தியாய என்பதன் திரிபு. லாசோ என்பது அதுபோன்றதே என்று விளக்கங் கூறியுள்ளார், திரு. கிருட்டிண சாத்திரியார்.1