உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சங்க காலத்து நடுகற்கள்*

பழங்காலத்துத் தமிழர் வீரத்தைப் போற்றினார்கள். போர்க் களத்தில் புறங்காட்டி ஓடாமல் திறலோடு போர் செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து போற்றிப் பாராட்டினார்கள். திறலோடு போர் செய்து களத்தில் விழுந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு நினைவுச்சின்னம் அமைத்தார்கள். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிச் சங்க நூல்களில் காணலாம்.

வெட்சிப்போர், கரந்தைப்போர், வஞ்சிப்போர், உழிஞைப் போர், நொச்சிப் போர், தும்பைப் போர், வாகைப் போர் என்று போரைத் தமிழர் ஏழு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். சங்க காலத்தில் அரசர்கள் போர் செய்வதைத் தங்கள் கடமைகளில் முக்கிய மானதாகக் கருதினார்கள். ஏழு வகையான போர்களிலே எந்தப் போரிலானாலும் ஒரு வீரன் திறலாகப் போர் செய்து உயிர் விட்டால் அந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார்கள். வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் திருக்குறளும் கூறுகிறது.

‘என் ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர் என் ஐ முன்நின்று கல்நின் றவர்'

(படைச்செருக்கு)

வீரத்தைப் பாராட்டி நடப்படுவதனால் நடுகல்லுக்கு வீரக்கல் என்றும் பெயர் உண்டு. வீரக்கல் நடுவதற்கு ஐந்து துறைகளைக் கூறுகிறார் தொல்காப்பியர். அவை காட்சி, கல்கோள், நீர்ப்படை, நடுதல், வாழ்த்து என்று ஐந்து துறைகளாம். காட்சி என்பது நடவேண்டிய கல்லை மலையில் கண்டு தேர்ந்தெடுப்பது. கல்கோள் என்பது தேர்தெடுத்த கல்லைக் கொண்டுவருவது, நீர்ப்படை என்பது கொண்டுவந்த கல்லில் இறந்த வீரனுடைய பெயரையும் அவனுடைய சிறப்பையும் பொறித்து நீராட்டுவது. நடுதல் என்பது அந்த வீரக்கல்லை நடவேண்டிய இடத்தில் நட்டு அதற்கு மயிற் பீலிகளையும், மாலைகளையுஞ் சூட்டிச் சிறப்புச் செய்வது. வாழ்த்து என்பது யாருக்காகக் கல் நடப்பட்டதோ அந்த வீரனுடைய திறலையும், ஆராய்ச்சி இதழ் 1:2; 1969.