உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

173

வளைத்து அம்புமாரி பொழிந்து பகைவரை ஓட்டித் தன்னூர்ப் பசுக்களை மீட்டுக் கொண்டான். ஆனால், வெற்றி பெற்ற அவன் பகை வீரர்கள் எய்த அம்புகளினால் புண்பட்டு மாண்டு போனான். திறலுடன் போர் செய்து மாண்டு போன அவ்வீரனுக்கு அவ்வூர்க் கோவலர்கள் நடுகல் நாட்டார்கள். அந்த நடுகல்லுக்கு வேங்கை மரத்துப் பூக்களினாலும் பனங்குருத்துகளாலும் மாலைகள் கட்டிச் சூட்டிச் சிறப்புச் செய்தார்கள். இந்தச் செய்தியைச் சோணாட்டு முகையலூர் சிறு கருத்தும்பியார் தம்முடைய செய்யுளில் கூறியுள்ளார். (புறம் – 265)

இன்னொரு ஊரில் பகைவர்கள் வந்து அவ்வூர்ப்பசு மந்தை களைக் கவர்ந்து கொண்டு போனார்கள். அப்போது அவ்வூர் வீரன் அவர்களைத் தொடர்ந்து சென்று போராடி மந்தைகளை மீட்டுக் கொண்டான். ஆனால். பகைவர் எய்த அம்புகள் உடம்பில் பாய்ந்த படியால் அவன் இறந்து போனான். அவனுக்காக நட்டவீரக் கல்லில் அவனுடைய பெயரைப் பொறித்து மயிற் பீலிகளினால் அக் கல்லை அழகு செய்து போற்றினார்கள் என்று மருதனிள நாகனார் என்னும் புலவர் பாடுகிறார். (அகம் 131: 6-11)

தன் ஊர்ப் பசுக்களைப் பகைவர் கவர்ந்துகொண்டு போன போது அவ்வூர் வீரன் அப்பகைவரிடமிருந்து பசுக்களை மீட்டான். ஆனால், பகைவரின் அம்புகளினால் புண்பட்ட அவன் இறந்து போனான். அவ் வூரார் அவ்வீரனின் நினைவுக்காக வீரக்கல் நட்டுப் போற்றினார்கள். அந்தக் கல்லின் மேல் அவ்வீரனுடைய பெயரை எழுதினார்கள். மாலைகளையும், பீலிகளையுஞ் சூட்டினார்கள். நடுகல்லின் மேலே சித்திரப் படத்தினால் (சித்திரம் எழுதப்பட்ட துணி), பந்தல் அமைத்துச் சிறப்புச் செய்தார்கள். இந்நிகழ்ச்சியை வடமோதங்கிழார் கூறியுள்ளார். (புறம். 260)

ஒரு ஊரிலிருந்த பசு மந்தைகளைச் சில வீரர்கள் வந்து பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அதையறிந்த அவ்வூர் வீரர் சிலர் அவர்களைத் தொடர்ந்து சென்று பசுக்களை மீட்பதற்காகப் போர் செய்தார்கள். பகைவரும் எதிர் நின்று அம்பு எய்தனர். பகைவரின் அம்புக்கு அஞ்சிச் சில வீரர்கள் ஓடிப்போனார்கள். ஒரு வீரன் மட்டும் புறங்கொடாமல் நின்று போர் செய்தான். பகைவீரர்களின் அம்புகள் அவனுடைய உடம்பில் தைத்து அவன் அக்களத்திலே இறந்து போனான். அவ் விறல்வீரனுக்கு நடுகல் நட்டுப் போற்றினார்கள் அவ்வூரார். (புறம். 263)