உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

ஆண்டுதோறும் வீரக்கல்லுக்கு அவ்வீரனுடைய உறவினர் பூசை செய்தார்கள். அந்நாளில் அந்நடுக்கல்லை நீராட்டி எண்ணெய் பூசி மலர் மாலைகளைச் சூட்டி நறுமணப் புகையைப் புகைத்தார்கள். அந்தப் புகையின் மணம் ஊரெங்கும் கமழ்ந்தது. வீட்டில் சமைத்த மதுவை இறந்த வீரனுக்குப் பலியாகக் கொடுத்தனர். இந்தச் செய்தியை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். (புறம். 329)

சங்க காலத்துத் தமிழகத்திலே அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன. ஆகையினால் நாடெங்கும் நடுகற்கள் காணப்பட்டன.

"நல்லமர் கடந்த நலனுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்

என்று (அகம் 67: 8-10) புலவர் நோய் பாடியார் கூறியது போன்று ஊர்களிலும் வழிகளிலும் நடுகற்கள் இருந்தன.

நடுகற்கள், பலகை போன்று அமைந்த கருங்கற்களினால் ஆனவை. அவை நீண்டதாக இருந்தன. 'நெடுநிலை நடுகல்' என்று ஒரு புலவர் கூறுகிறார். பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் இருந்தன. பழமையான நடுகற்களின் மேலே செடி கொடிகள் படர்ந்திருந்தன. நடுகல்லில் இறந்த வீரனுடைய பெயரும் பீடும் எழுதப்பட்டிருந்தபடியால் ‘எழுத்துடை நடுகல்' என்று கூறப்பட்டது. வழிப்போக்கர் வழியில் உள்ள நடுகற்களண்டை நின்று அக்கற்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படிப்பது வழக்கம். சில சமயங்களிலே அக்கற்களில் எழுதப்பட்ட எழுத்துகளில் சில எழுத்து மழுங்கி மறைந்து போய் சில எழுத்துக்களே எஞ்சியிருக்கும். அவ்வெழுத்துக் களைப் படிப்போருக்கு அதன் பொருள் விளங்காமலிருக்கும்.

சில வீரர்கள் தங்களுடைய அம்புகளை நடுகற்களின் மேல் தேய்த்துக் கூராக்குவர். எஃகினால் ஆன அம்பு முனையைத் தேய்க்கும்போது நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் சில மாய்ந்து போகும். எஞ்சியுள்ள எழுத்துக்களைப் படிப்போருக்கு அவ்வெழுத்தின் பொருள் விளங்காமற் போயிற்று. இச்செய்தியை மருதன் இள நாகனார் கூறுகிறார்.