உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

113

கணிகையரிடத்திலும் செலவு செய்து வறுமையடைந்தான். பிறகு அவன் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்காகக் கப்பல் வாணிகத்தைத் தொடங்கி கிழக்குக் கடலில் சாவக நாட்டுடன் வாணிகஞ்செய்யக் கப்பல் ஏறிச் சென்றதை மணிமேகலை காவியமே கூறுகிறது. (மணி: ஆதிரை பிச்சையிட்ட காதை) இவ்வாறு சங்ககாலத்துக் காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய பெரிய வாணிகர் இருந்ததை யறிகிறோம். காவிரிப்பூம்பட்டினம் அக்காலத்தில் உலகப் புகழ் பெற்றிருந்த துறைமுகப் பட்டினம். அங்கிருந்த வாணிகர், வாணிகப் பொருள்களைக் கப்பல்களில் ஏற்றுமதி செய்து கடல் கடந்த நாடு களுக்கு அனுப்பியும், இறக்குமதியான பொருள்களை உள் நாடுகளில் வணிகச் சாத்துகளின் மூலமாக அனுப்பி விற்றும் பெருஞ்செல்வத்தைத் தேடினார்கள். அவ்வாறு வாணிகஞ் செய்தவர்களில் கண்ணகியின் தந்தையும் கோவலனின் தந்தையும் குறிப்பிடத்தக்கவர் ஆவார்கள். அவர்களுடைய பெயரே அவர்கள் பெரிய வாணிகர் என்பதைத் தெரிவிக்கின்றன.

மாநாய்கன்

கண்ணகியின் தந்தை மாநாய்கன் என்று பெயர் பெற்றிருந்தான். மாநாய்கன் என்பது அவனுடைய சொந்தப் பெயர் அன்று; சிறப்புப் பெயர். மாநாய்கன் என்பது மாநாவிகன் என்னும் சொல்லின் திரிபு. மா பெரிய. நாவிகன் - கப்பல் வாணிகன். (நாவாய் - கப்பல். நாவிகன் - கப்பற்றலைவன்) மாநாவிகன் என்னும் பெயர் திரிந்து மாநாய்கன் என்று ஆயிற்று. கடல் கடந்த அயல் நாடுகளுடன் கப்பல் வாணிகஞ் செய்த படியால் இவன் மாநாய்கன் என்று பெயர் பெற்றான். இவனுடைய முன்னோரும் பரம்பரையாக நாவாய் வாணிகராக இருந்தனர் போலத் தெரிகின்றது. பெருஞ் செல்வனாகிய மாநாய்கனுக்கு ஒரே செல்வ மகள் கண்ணகி. சிலப்பதிகார காவியம் மாநாய்கனையும் அவன் மகள் கண்ணகியையும் இவ்வாறு கூறுகிறது.

“நாகநீள் நகரொடு நாகநா டதனொடு

போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில் மாகவான் நிகர்வண்கை மாநாய்கள் குலக்கொம்பர் ஈகைவாள் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள். (சிலம்பு: மங்கல வாழ்த்துப் பாடல்)