உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

143

முலையறுத்தல் என்பதுபற்றி இதுவரையில் ஒருவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. முலையறுத்தல் என்றால், உண்மையாகவே அறுத்துக் கொள்வது என்று பொருளா? ஒரு பெண் தன் மார்பை அறுத்துக் கொள்ள முடியுமா? இது நிகழக் கூடியதா? கண்ணகியாரும், திருமா வுண்ணியும் ஏனைய பெண் மகளிரும் தமது கொங்கையை அறுத்தனர் என்றால், உண்மையாகவே கொங்கையை அறுத்தனர் என்பது கருத்து அன்று. அதன் உண்மைக் கருத்து வேறு. இதுபற்றித் தனியே அடுத்த கட்டுரையில் விளக்கமாக எழுதுவோம். முதலில் இந்தக் கட்டுரையில் வேங்கை மரத்தைப்பற்றி ஆராய்வோம். அதாவது, திருமாவுண்ணியும் கண்ணகியும் வேங்கை மரத்தின்கீழ் நின்றனர். ஆகவே இருவரும் ஒருவரே என்று இவர்கள் கூறுகிறதைப்பற்றி ஆராய்வோம்.

6

வேங்கை மரம், குறிஞ்சி நிலத்திலே வளர்கிற மரம். குறிஞ்சி நிலம் என்பது மலையும் காடும் சேர்ந்த நிலம். குறிஞ்சி நில மக்களாகிய குறவர் தினை என்னும் தானியத்தைப் பயிரிடுவார்கள். தினைப் பயிர் வளர்ந்து கதிர்விட்டு முற்றும்போது கிளி முதலிய பறவைகள் கூட்டங் கூட்டமாக வந்து தினைக் கதிரைக் கொய்து தின்னும். காட்டில் வாழும் யானை, காட்டுப் பன்றி முதலிய மிருகங்களும் வந்து பயிரைத் தின்று அழிக்கும். ஆகவே அவற்றை ஓட்டிக் கழனியைக் காவல் காக்க வேண்டும். தினை வயலைக் காவல் காக்கும் வேலையைச் சாதாரணமாகக் குறப் பெண்கள் செய்வார்கள். வயலின் நடுவில் வளர்ந்திருக்கிற வேங்கை மரத்தின் கிளைகளின்மேல் பரண் (இதணம்) கட்டிக்கொண்டு அதில் அமர்ந்து பெண்கள் தினைப்புனைத்தைக் காவல் புரிவார்கள். பன்றி யானை முதலிய காட்டு மிருகங்கள் தங்களைத் தாக்காதபடி உயரமான இடத்திலே, வேங்கை மரத்தின்மேலே பரண் கட்டிக்கொள்வார்கள். பரணில் இருந்து கொண்டு, தட்டை அல்லது குளிர் என்னும் மூங்கில் கழியை வைத்துக் கொண்டு அவர்கள் கிளிகளையும் குருவிகளையும் ஓட்டுவார்கள். தட்டை என்பது மூங்கில் கழி. மூங்கிலின் ஒரு பக்கத்தைப் பல பிளவுகளாகப் பிளந்திருப்பார்கள். அதைத் தட்டினால் உரத்த ஒலி உண்டாகும் அவ்வொலியைக் கேட்டுப் பறவைகள் அஞ்சி ஓடிப்போகும். இவ்வாறு வேங்கை மரத்தின்மேலே பரணின்மேல் இருந்துகொண்டே தட்டையினால் ஒலி உண்டாக்கி மகளிர் தினைப் புனத்தைக் காவல் காப்பார்கள். இது சங்ககாலத்திலே குறிஞ்சி நிலத்திலே அன்றாடம் நிகழ்ந்த சாதாரண நிகழ்ச்சி.