உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இடையிலே வடக்குத் தெற்காகச் சென்று பாண்டி நாட்டில் பொதிகை மலையில் முடிகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் சேரநாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் எல்லையாக அக்காலத்தில் அமைந்திருந்தன.

வைகையாற்றின் கரை வழியே மேற்கு நோக்கி வழிநடந்த கண்ணகியார், வைகையாறு குறுகியதாயும் ஆழமில்லாமலும் உள்ள இடத்தில் ஆற்றைக் கடந்து அக்கரையடைந்து வடமேற்காக நடந் திருக்கவேண்டும். கடைசியில் பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலை மேல் தோன்றுகிற இடத்தில் (அயிரிமலைக்கு அருகில்) வந்தபோது கண்ணகியார் உயிர்பிரிந்திருக்கவேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த அயிரிமலைமேல் பெரியாறு தோன்றுகிறது. அங்கு அந்த ஆற்றுக்கு அயிரியாறு என்று பெயர். அந்த இடத்தில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது. அந்தக் கொற்றவைக்கு அயிரிக் கொற்றவை என்பது பெயர். அயிரிமலையையும் அங்கு உண்டாகிய அயிரி ஆற்றையும் அங்கிருந்த அயிரிக் கொற்றவையையும் பதிற்றுப் பத்துச் செய்யுட்கள் கூறுகின்றன. அயிரி மலைக் கொற்றவை சேர அரசர்களின் குலதெய்வம். அயிரிமலைமேல் தோன்றுகிற அயிரியாறு பிறகு அம்மலையின் மேற்குப் பக்கமாகத் தரையில் இழிந்து பெரியாறு என்று பெயர்பெற்றுச் சேரநாட்டில் பாய்ந்து வஞ்சிமாநகர்க்கு அருகிலே முசிறித்துறை முகத்தண்டை கடலில் கலந்தது. மலைமேலிருந்து பெரியாறு கீழே இறங்குகிற இடத்தில்தான் செங்குட்டுவன் ஆண்டு தோறும் சென்று சுற்றத்தோடு தங்கி வேனிற்காலத்தைக் கழித்தான்.

கோவலன் கண்ணகியார் வாழ்ந்திருந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், சேர நாட்டுக்குக் கிழக்கே இருந்த கொங்கு நாடு சேர அரசரின் ஆட்சியில் இருந்தது. அந்தக் கொங்கு நாட்டு சேர அரசர்களின் இளைய வழிப்பொறையர் என்று பெயர்பெற்று ஆட்சி செய்தார்கள் என்பதைப் பதிற்றுப்பத்தில் அறிகிறோம். கொங்கு நாடு சேர இனத்தோடு சேர்ந்து இரும்பொறை அரசர்களால் ஆட்சி செய்யப் பட்ட காலத்தில் கண்ணகியார் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த அயிரிமலைக்கு அருகில் ஏதோ குன்றின்மேல் உயிர் விட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.