உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இந்த வாசகத்தைப் படித்த கோவலனுக்கு மாதவியின் மேலிருந்த வெறுப்பு நீங்கிற்று. ஆனால் அவன் பூம்புகாருக்குத் திரும்பி வர வில்லை. மதுரை மாநகரத்துக்கே போய்விட்டான். போனவன், அரண்மனையில் சிலம்பைக் களவாடினான் என்று பொய்யாகக் குற்றஞ் சாற்றப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.

கோவலன் இறந்த செய்தியைக் கேட்டபோது மாதவி தீராத் துயரம் அடைந்தாள். அவள் கைம்மை நோன்பை மேற்கொண்டாள். அரங்கேறி ஆடல் பாடல் நிகழ்த்துவதை அடியோடு நிறுத்தி விட்டாள். அன்று முதல் அவள் அரங்கேறவே இல்லை. மாதவியின் தாயாகிய சித்திராபதி மாதவியின் மனத்தை மாற்ற முயற்சி செய்தாள். மாதவி குலமகள் அல்லன் என்பதையும் கணிகையர் குலத்தில் பிறந்தவள் என்பதையும் நினைவுறுத்தி அவளை மறுபடியும் அரங்கேறி ஆடல் பாடல்களை நிகழ்த்துமபடித் தூண்டினாள். மீண்டும் கணிகையர் தொழிலை மேற்கொள்ளும்படி வற்புறுத்தினாள். மாதவியோ அதற்குச் சற்றும் இணங்கவே இல்லை. அவள் கணிகைத் தொழிலை மேற் கொள்ளாமலும் அரங்கேறி ஆடல் பாடல் நிகழ்த்தாமலும் குலமகள் போலக் கைம்மை நோன்பை மேற்கொண்டாள்.

மாதவி கணிகைத் தொழிலில் ஈடுபடாத படியினாலே சித்திராபதி வெறுப்படைந்தாள். ஆனால், தன் குலத்தொழிலை நடத்தும்படி தன் பேர்த்தியும் மாதவியின் மகளுமான மணிமேகலையைத் தூண்டினாள். மணிமேகலையை அரங்கேற்றித் தலைக்கோலிப் பட்டம் பெறச் செய்யவும், பிறகு அவளைச் சோழ அரசன் மகனான உதயகுமரனின் காமக்கிழத்தியாக்கவும் முயற்சி செய்தாள். ஆனால் மாதவியோ தன் மகள் மணிமேகலையைக் கணிகையர் வாழ்க்கையில் புகுத்த விரும்ப வில்லை. அவனை ஒரு நல்ல குடும்ப மகள் வாழ்க்கையில் புகுத்த எண்ணினாள். இதனால் சித்திராபதிக்குப் மாதவிக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. தன் தாயாகிய சித்திராபதி தன் மகளான பன்னிரண்டு வயதுள்ள மணிமேகலையை எப்படியும் கணிகை வாழ்க்கையில் புகுத்திவிடுவாள் என்று அஞ்சினாள் மாதவி. அவ்வாறு நிகழாமல் தடுக்க வேண்டுமென்று விரும்பினாள். ஆகவே சித்திராபதியிடமிருந்து விலகி வாழ மாதவி கருதினாள்.

அக்காலத்துச் சமுதாய சூழ்நிலை மாதவியின் கருத்துக்கு ஆதரவு காட்டவில்லை. கணிகையர் குலத்தில் பிறந்தவர் கணிகையராகவே