உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

187

இருக்கவேண்டும், அவர்கள் குலமகளிராக வாழக்கூடாது என்னும் தவறான கருத்து அக்காலத்து மக்கட் சமுதாயத்தில் வேரூன்றி யிருந்தது. சைவம், வைணவம், சமணம் (ஜைனம்) என்னும் சமயங்களைச் சேர்ந்த அக்காலத்து மனித சமூகம் மாதவியின் சீர்திருத்த வாழ்க்கைக்கு ஆதரவு காட்டுவதாக, உதவி செய்வதாக இல்லை. அக்காலத்தில் அவளுக்கு ஒரே ஒரு புகலிடம்தான் இருந்தது. அதுதான் பௌத்தமதம்.

புத்தர் பெருமான் தமது வாழ்க்கைக் காலத்திலேயே கணிகையர், கள்வர் போன்ற தீய வாழ்க்கையாளரையும் திருத்தி அவர்களையும் நல்வழிப்படுத்தியிருக்கிறார். அவரைப்பின்பற்றி வந்த பௌத்த மதம், தீய வழியில் வாழ்பவர்களையும் நல்வழிப்படுத்தி உதவி செய்து வந்தது. மாதவி இதனை நன்கறிந்தாள். தானும் தன் மகளான மணி மேகலையும் நல்வாழ்க்கை வாழ்வதற்குக் கைகொடுத்து உதவக் கூடியது பௌத்த மதம் ஒன்றுதான் என்பதை மாதவி நன்கறிந்தாள். தனக்கும் தன் மகளுக்கும் பௌத்த மதந்தான் ஒப்பற்ற புகலிடம் என்பதை அறிந்தாள்.

அக்காலத்தில் தமிழ்நாட்டில், சிறப்பாகக் காவிரிப்பூம் பட்டினத்தில் பௌத்தமதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது. அந்தப் பட்டினத்திலே பேர்பெற்றிருந்த பௌத்த விகாரையின் தலைவராக இருந்தவர் எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட அறவண அடிகள் என்னும் பெரியார். மாதவி, தன் தாயாகிய சித்திராபதியை விட்டுப் பிரிந்து மணிமேகலையுடன் பௌத்த விகாரைக்குச் சென்று அறவண அடிகளிடம் அடைக்கலம் புகுந்து திரிசர ணத்தைப் புகலடைந்து பஞ்சசீலம் பெற்று பௌத்த மதத்தை மேற்கொண்டாள். பௌத்த மதத்தைப் புகலடைந்து அந்த மதத்தை மேற்கொண்ட மாதவி தன் மகள் மணிமேகலையுடனும் சுதமதி என்னும் தோழியுடனும் பௌத்த சமூகத்தில் இடம் பெற்று வாழ்ந்தாள்.

வழக்கம்போல அந்த ஆண்டிலும் காவிரிப் பூம்பட்டினத்தில் இந்திரவிழாக் கொண்டாடப்பட்டது. வழக்கப்படி விழாவுக்கு வேண்டிய ஆயத்தங்கள் எல்லாம் நகரத்தில் நடைபெற்றன. இந்திர விழாவில் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி அரங்கமேடை யல்லவா? மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவள் கலையரசி மாதவி! அவளுடைய ஆடல் பாடல்கள் நகர மக்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்தன. கோவலன் இறந்துபோன காரணமாக அவள்