உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு, படிப்போர்க்கு ஓர் ஐயம் தோன்றக்கூடும். எதிர்காலப் புத்தரைக் கூறுவதாக இருந்தால் கபில வாஸ்து நகரத்தை ஏன் குறிப்பிடவேண்டும்? கபிலவாஸ்து சென்று போன கௌதமபுத்தர் பிறந்த இடமாயிற்றே; இதைஏன் எதிர்காலப் புத்தருடன் தொடர்புபடுத்தவேண்டும்; என்னும் ஐயம் தோன்றலாம்.

இனி வரப்போகிற புத்தர் எந்த ஊரில் பிறக்கப்போகிறார் என்பது தெரியாது. புதிதாகத் தோன்றும் புத்தர்கள், தங்களுக்கு முன்பு இருந்து மறைந்துபோன புத்தர்கள் பிறந்த இடத்தையும் நிர்வாண மோட்சம் அடைந்த இடத்தையும் புண்ணிய திருப்பதியாகப்போற்றுவது மரபு. இந்த மரபுப்படி, இனி வரப்போகிற புத்தர், சென்றுபோன கௌதம புத்தர் பிறந்த இடமாகிய கபிலவாஸ்து நகரத்தைப் போற்றி அங்குத் தமது உபதேசத்தைச் செய்வார். இதைத்தான் சாத்தனார் மேற்காட்டிய செய்யுட்பகுதியில் கூறினார். எனவே, கோவலனும்கண்ணகியும் இனி வரப்போகிற புத்தரிடம் கபிலவாஸ்து நகரத்திலே நல்லறங்கேட்டு வீடு பெறுவார்கள் என்பது சாத்தனாரின் கருத்து. சென்றுபோன கௌதம் புத்தரிடம் நல்லறங் கேட்பவர்கள் என்பது பொருள் அன்று.