உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இவ்வரசர்கள் நெடுங்காலம் ஆட்சி செய்திருப்பதனாலே

இவர்களைக் கற்பனைப் புருஷர் என்று சரித்திரக்காரர் ஒதுக்கிவிட வில்லை. ஆனால், ஆட்சி ஆண்டை ஏற்றுக்கொள்ளவில்லை. காலக் கணிப்பில் பண்டையோர் ஏதோ ஒரு முறையைக் கையாண்டிருக் கின்றனர். அந்த முறையின் உண்மை நமக்கு இப்போது விளங்க வில்லை. இனி ஆராய்ச்சியில் வெளிப்படக் கூடும்.

இவற்றை எல்லாம் நான் இங்கு எடுத்துக்காட்டிய தன் கருத்து என்னவென்றால், மூன்று சங்கங்கள் இருந்த கால எல்லை மிக அதிகமாகக் காணப்படுவதனால், அது காரணமாக முச்சங்கங்கள் இருந்தன என்பது பொய்க்கதை என்று கூறி அவற்றைத் தள்ளுவது கூடாது என்றும், இதைவிட அதிக கால எல்லையைக் கூறுகிற சுமேரிய அரசர் பட்டியலையும் கலிங்க நாட்டுப் பட்டியலையும் சரித்திரக்காரர் ஏற்றுக்கொண்டு சரித்திரம் எழுதியிருக்கிறபடியால், பாண்டியர் பட்டியலையும் அவர் அமைத்த சங்கத்தையும் ஏற்றுக் கொண்டு அதில் கூறப்படும் நீண்டகால வரையரையைத் தள்ளிவிடலாம் என்றும் காட்டுவதற்காகவே.

சங்கங்களின் காலம் மிக நீண்டதாகக் கூறப்படுவதால், அது காரணம் பற்றிச் சங்கங்கள் இல்லை என்று கருதிக்கொண்டு, ஆகவே தொல்காப்பியர் காலம் மிகப் பிற்காலம் என்று கூறுவது ஒவ்வாது இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் கூறுவதுபோல தொல் காப்பியம் இடைச்சங்க காலத்தின் இறுதியில் தோன்றிய நூல் என்பதில் ஐயமில்லை.

கடைச்சங்க காலத்தில் 49 பாண்டியர் இருந்தனர் என்று கூறப் படுவதால், தலைமுறையொன்றுக்கு 20 ஆண்டு என்று சாதாரணமாகச் சரித்திர நூலோர் கணிக்கிற கணக்குப்படி பார்த்தால் 980 ஆண்டு கடைச் சங்கம் இருந்தது என்று கொள்ளலாம். கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் (கீழ்வரம்பு) கி.பி. 300 என்று வைத்துக்கொண்டால், கி.மு. 680 இல் கடைச்சங்கம் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் இடைச்சங்கத்தின் இறுதியில் தோன்றியது என்று கூறப்படுவதால், ஏறத்தாழ கி.மு. 800 இல் தொல்காப்பியம் தோன்றியிருக்கலாம் என்று கருதலாம்.