உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

351

என்று கூறியபடி சுடர்விட்டெரிவது போன்ற தலைமயிரும், குண்டலங் கள் விளங்கும் காதுகளும், புன்முறுவல் பூத்த திருவாயும், நின்ற கோலமாகக் காட்சியளிக்கிறார் பைரவ மூர்த்தி. அவருடைய ஒரு கையில் தண்டாயுதமும் (லகுலியும்), ஒரு கையில் கபால பாத்திரமும் மற்றொரு கையில் சூலமும் தாங்கியுள்ளார். இன்னொரு கையை அபயக் கையாகத் தாங்கியுள்ளார். இந்தஅழகான திருவுருவத்தில் சிற்பியின் கலைத்திறன் காணப்படுகிறது.

திருவொற்றியூர்க் கோயிலிலே இன்னொரு லகுலீசர் (பைரவர்)திருவுருவமும் காணப்படுகிறது. இந்த மூர்த்தியைக் கௌளீசர் என்று கூறுகிறார்கள். கௌளீசர் என்பது லகுலீசர் என்பதன் திரிபு. இருந்த கோலமாகக் காணப்படும் இந்த உருவமும் சடைமுடியில் கபாலந்தரித்து வலது கையில் திரிசூலமும் இடது கையில் காபலமும் ஏந்தி, மற்ற இரண்டு வலது இடது கைகளில் அபயவரத முத்திரை காட்டிப் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமர்ந்திருக்கிறது. இந்த உருவங்கள் இங்கு இருப்பதனாலே முற்காலத்தில் காபாலிகரும் பாசுபதரும் இங்கு இருந்தார்கள் என்பதை அறியலாம்.

பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வைரவம் என்னும் இந்த அகப்புறச் சமயங்கள் நான்கும் இப்போது மறைந்து விட்டன.

6. சிவனும் திருமாலும்

சிவபெருமானையும் திருமாலையும் தமிழர் தொன்று தொட்டு வணங்கிவந்தார்கள். இருவரையும் வெவ்வேறு கடவுளாகப் பிரிக்காமல் இருவரையும் ஒருவராக வழிபட்டனர். ஒரே கோயிலில், ஒரே இடத்தில் இந்த இரு தெய்வ வணக்கம் நடைபெற்றது. பத்தி யியக்கம் தோன்றிய பிற்காலத்திலும், அதாவது கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் சிவபெருமானையும் திருமாலையும் தனித்தனி தெய்வங்களாகப் பத்திசெய்து திருப்பதிகங்கள் பாடிய காலத்திலுங்கூட, இரு கடவுளரும் பெரும்பாலும் ஒரே கோயிலில் வழிபடப்பட்டனர். அக்காலத்தில் சிவபெருமானுக்கு அம்மன் சந்நிதி தனியே இருந்ததில்லை. அக்காலத்துக் கோயில்களில் சிவபெருமான் உருவமும் திருமால் உருவமும் அமைக்கப்பட்டிருந்தன. ஏனென்னறால், சைவசமயம் என்றும் வைணவசமயம் என்றும் வெவ்வேறு சமயப் பிரிவுகளும்