உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

95

கிடைத்துள்ளன. தமிழகத்து மகளிர் சங்கு வளைகளை அணிந் திருந்ததைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். 'கோணேறி லங்கு வளை,' (ஐங்குறு, நெய்தல், பாணற் குரைத்த பத்து 6), 'இறைகேழ் எல்வளை', ( ஷ சிறுவெண்காக்கை. 5) ‘கடற்கோடு செறிந்த மயிர்வார் முன்கை’, (ஐங்குறு, நெய்தல், வளைப்பத்து.1), 'நிரைவளை முன்கை நேரிழை மகளிர்’, (குறுந். 336 : 1), அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை, (அகம். 361 : 4) சின்னிரை வால்வளைக் குறுமகள், (குறுந். 189:6), ‘சுடரிலங்கு எல்வளை', (அகம். 68: 12) முதலியவை காண்க.

ம்

பழங்காலத் தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திலும் கடைத் தெருக்களில் வளைகளை அறுத்துத் தொடி செய்யும் தொழிற் சாலைகளும் வளை விற்கும் கடைகளும் இருந்தன. பகன்றைக் கொடியின் மலர், சங்கை அறுத்து எறியப்பட்ட கொழுந்து போன்று (சங்கின் உச்சியைப்போல) இருந்தது என்று ஒரு புலவர் கூறுகிறார்.

"வேளாப் பார்ப்பான் வாளரந் துமிழ்த்த

வளைகழிந் தொழிந்த கொழுந்தின் அன்ன

99

தளைபிணி யவிழாச் சுரிமுகப் பகன்றை. (அகம்.24: 1-3)

வளைசெய்யும் தொழிலாளிகள் சிறு வாளினால் சங்கை அறுத்து அரத்தினால் அராவி வளைகளைச் செய்தார்கள் என்று சங்க நூல்களி லிருந்து தெரிகின்றது. 'கடற்கோடு அறுத்த அரம்போழ் அவ்வளை’, (ஐங்குறு. நெய்தல், வளைப்பத்து), 'அரம்போழ் அவ்வளை பொலிந்த முன்கை, (அகம். 6:2) அரம்போழ் அவ்வளைக் குறுமகள் (ஐங்குறு, நெய்தல், நெய்தற்பத்து, 5) என்பன காண்க. தமிழ்நாடு மட்டும் அன்று, பாரதநாடு முழுவதிலும் அந்தக்காலத்தில் மகளிர் சங்குவளைகளை அணியும் வழக்ம் இருந்தது. சங்குவளை அணியும் வழக்கம் இருந்தபடியால் சங்குவளை செய்யுந் தொழிலும் வளை வாணிகமும் நாடெங்கும் இருந்தன. அண்மைக்காலம் வரையில் சங்குவளை யணியும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்தது. சங்குவளை வாணிகர் சங்குவளைகளை எடுத்துக்கொண்டு நகர வீதிகளில் சென்று விற்றனர். அவர்கள் வயது சென்ற ஆடவர். சொக்கப்பெருமான் வளை வாணிகனாக வந்து மதுரைத் தெருக்களில் வளைகளை விற்றார் என்று திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றன. (வளையல் விற்ற படலம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம், வளையல் விற்ற திருவிளையாடல், நம்பி திருவிளையாடற் புராணம்.)