உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

-

சமணம்

145

அமண்குடி :

சோழ மண்டலத்து உய்யக் கொண்ட வளநாட்டைச் சேர்ந்த வெண்ணாடில் அமண்குடி என்னும் ஊர் இருந்ததென்றும் இவ்வூர் பிற்காலத்தில் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றப் பட்டதென்றும் ஸ்ரீ இராசராச சோழரது சேனாபதியான கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரம்மராயன் என்பவர் இவ்வூரில் வாழ்ந்திருந்தார் என்றும், தஞ்சை இராச ராசேச்சுரக் கோயில் கல்வெட்டெழுத்துக்கள் கூறுகின்றன.146 இவ்வூர்ப் பெயரே இங்குச் சமணர் வாழ்ந்திருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது.

கருந்திட்டைக்குடி :

(கருந்தட்டான்குடி என்று வழங்குவர்) அங்குச் சமணர் முன்னாளில் சிறப்புற்றிருந்தனர். இப்போதும் இங்குச் சமணர் உள்ளனர். சமண ஆலயமும் உண்டு.

குகூர் :

இங்குக் குலோத்துங்கன் I காலத்தில் குலோத் துங்கன் பெயரால் பெரும் பள்ளி கட்டப்பட்டது.147

கோவிலங்குளம் :

8. இராமநாதபுர மாவட்டம்

அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இவ்வூரில் அம்பலப்ப சாமி கோயில் மேடையின் மேற்கு, தெற்குப் பக்கத்தில் சில சாசனங்கள் காணப்படுகின்றன. இப்போது, இந்த மேடைமட்டும் உள்ளது; கோயில் இல்லை. இங்குள்ள சாசனம் நல்ல இலக்கிய நடையுள்ளது. திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 48ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம், முக்குடைநாதருக்கு (அருகக் கடவுளுக்கு) பொன்மயமான மண்டபமும் விமானமும், முக்குடை நாதர், இயக்கி இவர்களின் செப்புத் திருமேனிகளும், தண்ணீர்ப்பந்தலும் இக்கோயில் கட்ட நிலமும் இவ்வூரில் இருந்த சமணர்களால் அமைக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இச்சாசனத்தில் இவ்வூர் 'வேம்பு வடநாட்டுச் செங்காட்டிருக் கையைச் சேர்ந்த கும்பனூர்' என்று கூறப்படுகின்றது. இங்குள்ள இன்னொரு சாசனம்,