உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

193

எனப் பெயருடைய சுனையொன்று உண்டு.!' பண்டைக்காலத்தில் இங்குச் சமண முனிவர் இருந்தபடியாலும், எழுகடல் என்னும் சுனை இருப்ப தாலும் ஏழுகடல்களையும் ஓரிடத்தில் வரவழைத்துப் பாண்டியனுக்குக் காட்டினார்கள் என்று இக்கதையைக் கற்பித்திருக்கக்கூடும்.

உறையூரை அழித்த செய்தியை ஆராய்வோம். உறையூரில் தொன்றுதொட்டுச் சமணர் இருந்து வந்தனர். இவ்வூருக்கருகிலுள்ள திருச்சிராப்பள்ளி மலைக்குகையிலும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. சிலவேளைகளில் வெள்ளப் பெருக்காலும் மண்காற்றினாலும் வேறு காரணங்களாலும் ஊர்கள் அழிந்துபோவது இயற்கை. (இவ்வாறு அழிவுண்ட ஊர்கள் சில இக்காலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.) இந்த இயற்கைப்படி உறையூரும் மண்காற்றினால் அழிந்திருக்கக்கூடும். ஆனால், சமணர் மந்திரத்தினால் அழித்தார்கள் என்பது நம்பத்தக்கதன்று.

இவ்வாறெல்லாம் சமணர்மீது சுமத்தப்பட்ட இக் கற்பனைக் கதைகள் நாளடைவில் சமணருக்குப் பெருமையையும் மதிப்பையும் உண்டாக்கிற்றுப் போலும், சமணர் மனித ஆற்றலுக்கும் மேற்பட்ட தெய்வ சக்தியும், மந்திர சக்தியும் உள்ளவர் என்னும் எண்ணத்தைப் பாமர மக்களுக்கு இக்கதைகள் உண்டாக்கிவிட, அவர்கள் சமணரை நன்கு மதித்தனர் போலும். ஆகையால், சமணர் செய்ததாக முதலில் கற்பிக்கப்பட்ட இக்கதைகளை மாற்றிச் சிவபெருமான் தமது ஆற்றல் தோன்றச் செய்த திருவிளையாடல்கள் என்று கூறிப் பிற்காலத்தில் புராணங்களை எழுதிக் கொண்டார்கள் போலும்.

யானையைப் பாம்பு விழுங்குவது போல் சமணர் காட்டினார்கள் என்னும் கதையை இரண்டாகப் பகுத்து, மதுரையான திருவிளையாடல் என்றும், யானை எய்த திருவிளையாடல் என்றும் பிற்காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகின்றன. மதுரையை அழிக்கச் சமணர் பாம்பையுண்டாக்கி அனுப்பினர் என்றும் அதனைச் சிவன் அம்புவிட்டுக் கொல்ல அப்பாம்பு விஷத்தைக் கக்கிற்று என்றும், பிறகு சிவன் தனது சடையில் உள்ள மது வெள்ளத்தை விஷத்தின் மேல் தெளித்து விஷத்தை மதுவாக்கினபடியால் அவ்வூருக்கு மதுரை எனப் பெயர் ஏற்பட்டதென்றும் கதை கற்பித்தனர். அவ்வாறே, சமணர் யானையையுண்டாக்கி மதுரையை அழிக்க ஏவினர் என்றும் சிவபிரான் அதை அம்பெய்து கொன்றார் என்றும் இன்னொரு கதையையும் கற்பித்துக் கொண்டனர்.