உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

அளவுக்குத் தக்கபடி உயிரானது பெரியதாகப் பரவியும் சிறியதாகச் சுருங்கியும் இருக்கும். "பெரியதன் ஆவி பெரிது” என்பது ருகதர் வழங்கும் பழமொழி.

மேலும், உயிர்கள் வீட்டது, மாற்றது என இரு வகைப் படும். வீட்டது எனப்படும் 'மோக்ஷ ஜீவன்' அறிவு விளங்கப் பெற்று இரு வினைகளையும் நீக்கி வீடுபேறடையும் தன்மையுள்ளது. மாற்றது எனப்படும் ‘சம்சார ஜீவன்' நல்வினை, தீவினைகளிற் கட்டுண்டு அவ்வினைப் பயன்களைத் துய்ப்பதற்காக நரகத்திலும் சுவர்க்கத்திலும் பிறப்பதும், இறப்பதுமாக உழன்று திரியும் தன்மையுள்ளது. விலங்கு, நரகர், தேவர் என்னும் பிறப்புக்களில் பிறந்த உயிர்கள் அப்பிறவி களிலே வீடுபேறடையா. மக்களாகப் பிறந்த உயிர்கள் மட்டும் வீடுபெறும் வாய்ப்பு உடையன. அதுவும் துறவு பூண்டவர்களுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தார்க்கு வீடுபேறு கிடையாது.

2. உயிரல்லது (அஜீவன்) :

புத்கலம், தர்மம், அதர்மம், காலம், ஆகாயம் என்னும் இவை ஐந்தும் உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம். இவைகளும் உயிரைப் போன்றே அனாதியாக உள்ளன. அஃதாவது, இவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிர்களின் இயல்பாகிய நல்வினை, தீவினை என்னும் இருவினைகளைச் செய்து அவ்வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைத் துய்த்துப் பல பிறவிகளிலும் பிறந்து, இறந்து உழல்வதும் பின்னர், நல்லறிவும் நன்ஞானமும் பெற்று இருவினைக் கட்டறுத்து, வீடுபேறடைவதும் ஆகிய இத்தன்மைகள் உயிரல்ல னவாகிய இந்த அஜீவப் பொருள்களுக்குக் கிடையா.

இந்த ஐந்து அஜீவப் பொருள்களின் இயல்பை விளக்குவோம். புத்கலம் என்னும் பொருள், உயிர்களில் படிந்து அவற்றைப் புண்ணிய பாவங்களாகிய இருவினைகளைச் செய்விக்கும் தன்மையுள்ளது. புத்கலம் என்பதில் ஐந்து புலன்களும், ஐம்புலன்களால் அறியப்படுகிற பொருள்களும், இருட்டும், வெளிச்சமும், வெயிலும், நிழலும், ஒளியும், நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு பூதங்களும் அடங்கியுள்ளன. நுண்ணிய அணுப்பொருளாகவும் (சூக்குமப் பொருள்), பெரிய பருப் பொருளாகவும் (ஸ்தூலப் பொருள்) மாறும் தன்மையுள்ளது இந்த புத்கலம். புத்கலத்திற்கு உருவம், நிறம், சுவை, நாற்றம், ஊறு என்னும் இவைகளும் உண்டு. உயிர்களுக்கு உடம்பையும், மனம், வாக்கு, சுகம்,