உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆருகதரின் இல்லற ஒழுக்கம்

"பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே’

என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியது போல, சமணசமயத்தில் இல்லறம், துறவம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்க்ள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தில் கூறினோம். ஈண்டுச் சாவகர் (சிராவகர்) எனப்படும். இல்லறத்தார் ஒழுகவேண்டிய ஒழுக்கத்தைக் கூறுவோம்'.

இல்லறத்தில் ஒழுகும் சமணர் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பத்து விரதங்களைக் (ஒழுக்கங்களைக்) கடைப்பிடித்துத் தவறாது ஒழுக வேண்டும் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவை யாவன : 1. கொல்லாமை, (அகிம்சை) 2. பொய்யாமை (பொய் பேசாதிருத்தல்) 3. கள்ளாமை (களவு செய்யாதிருத்தல்) 4. பிறன்மனை விரும்பாமை 5. பொருள் வரைதல் இவை ஐந்தும் ‘அணுவிரதம்' என்று கூறப்படும்.

இவ்வைந்தில், முதல் நான்கும் வெளிப்படையாக விளங்குகின்றன. ஐந்தாவதாகிய பொருள் வரைதல் என்பது, பொருளை இவ்வளவுதான் ஈட்டவேண்டும் என்னும் வரையறுத்துக் கொண்டு அவ்வரையறைப் படி பொருளை ஈட்டுவதாகும். நிலபுலம், வீடுவாசல், பணம், காசு, பொன் பொருள், தானிய தவசம், ஆடுமாடு முதலிய பொருள்களை இவ்வளவு தான் ஈட்டுவேன்; இதற்குமேல் சம்பாதிக்கமாட்டேன் என்று ஒரு வரையறை செய்து கொண்டு அந்த அளவாகப் பொருளைச் சேர்த்தல்.

இந்த ஐந்து அணுவிரதங்களோடு கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை என்னும் இம்மூன்றையும் சமணர் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

தேன் உண்பது ‘பாவம்' என்று ஏன் கொண்டார்கள் எனில், நமது நாட்டில், தேன் அடையிலிருந்து தேனை எடுக்கும்போது தீயிட்டுக் கொளுத்தித் தேனீக்களைக் கொன்றும் தேன் அடையிலுள்ள தேன்