உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

வ்

அவையிலுள்ளோர் அப்புணர்ச்சியை ஒப்புக் கொண்டனரென்றும், ஒரு வரலாறு கூறப்படுகின்றது. இவ் வரலாற்றினின்றும், அக்காலத் திலேயே இந்நூல் வழக்கொழிந்து விட்டதென்பதை நன்குணரலாம். இது இயற்றப்பட்ட காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.

இந்த நூலும் இதன் உரையும் தமிழ்நாட்டின் சரித்திரம் முதலியவற்றை ஆராய்வதற்குச் சிறிது உதவி புரிகின்றன. சோழர்கள் கூடல் சங்கமம் முதலிய இடங்களில் அயல்நாட்டு வேந்தரை வென்ற செய்திகள் இவ்வுரையில் காட்டப்படும் மேற்கோட் செய்யுள்களினால் விளங்குகின்றன. இச்செய்திகளைக் கல்வெட்டுச் சாசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. குண்டலகேசி விருத்தம், கலிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம், உதயணன் காதை, நியாய சூடாமணி, புதியா நுட்பம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம், வச்சத்தொள்ளாயிரம் முதலிய நூல்களின் பெயர் இவ்வுரையில் கூறப்படுகின்றன. புத்தரைப் பற்றிய அழகான பாடல்கள் யாப்புப் படல உரையில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. இந்நூல் இணைப்பில் சேர்க்கப்பட்ட செய்யுள் களில் பல இவ்வுரையினின்றும் எடுக்கப்பட்டவையே.

"

போற்றுவோரின்றி இறந்துபட்ட சில நூல்களைப் போன்றே இந்நூலும் இறந்துபட்டிருக்கும். நற்காலமாக, இறக்குந் தறுவாயி லிருந்த இந்த நூலினைக் காலஞ்சென்ற ராவ்பகதூர், சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் அச்சிற் பதிப்பித்துப் புத்துயிர் கொடுத்தார்கள். 1881ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பிக்கப்பட்டது இப்புத்தகம்.

அகத்திய முனிவர், சிவபெருமானிடத்தில் தமிழைக் கற்றார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. ஆனால், பௌத்தராகிய புத்த மித்திரனார், அகத்தியர் அவலோகிதீஸ்வரர் (போதி சத்துவர்) இடத்தில் தமிழ் கற்றதாகக் கூறுகிறார்.

66

ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவனிக்கு இயம்பிய தண்தமிழ்”

என்று, இவர் தமது வீரசோழியப் பாயிரத்தில் கூறுவது காண்க. அன்றியும், அவலோகிதரே தமிழ்மொழியை உண்டாக்கினார் என்றும் இவர் கூறுகிறார். “பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த்தமிழ்” என்று இவர், கிரியாபதப் படலக் கடைசிச் செய்யுளில் கூறுவது காண்க.