உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

209

ஆகவே சாவகத் தீவில் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது.

3.

மணிமேகலை சற்று எளிய நடையில் அமைந்திருப்பதும், அதில் வரும் ‘மாதவி’, ‘சுதமதி’, ‘மணிமேகலை’, ‘சித்திராபதி’, ‘சங்க தருமன்' முதலான பெயர்கள் சங்க நூல்களில் காணப்படாத வட நாட்டுப் பெயர்களாக விருப்பதும் பற்றி இந்த நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவர் சிலர்.

மணிமேகலையை இயற்றிய சாத்தனார் இந்நூலைப் பண்டிதர் களுக்கு மட்டும் இயற்றினாரில்லை; புலமை நிரம்பாத மற்றவர் களுக்கும் விளங்கவேண்டும் என்பதே அவரது கருத்து. ஏனென்றால், பௌத்த மதத்தையும் அதன் கொள்கைகளையும் பல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு இஃது இயற்றப் பட்டதாகத் தெரிகின்றது. பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதக் கொள்கைகளைப் பல்லோருக்கும் விளங்கும்படி எழுதவும் பேசவும் வேண்டும் என்பது அம்மதங்களின் கொள்கை. ‘பௌத் தரும் தமிழும்’ என்னும் அதிகாரம் காண்க.

மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள மக்கட் பெயர்கள் பெரும் பான்மையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன வென்பது உண்மையே. வடமொழிப் பெயராக இருப்பது கொண்டு பிற்காலத்து நூலென்று சொல்வதற்கில்லை. பௌத்தம், ஜைனம் முதலான மதங்கள் வடநாட்டினின்று வந்த மதங்கள். ஆகையால், அம்மதங்களை மேற்கொண்ட தமிழர்களுக்கு அம்மதச் சார்பான வடமொழிப் பெயர்கள் அமைப்பது இயல்பு. இப்பொழுதும் தமிழன் கிறித்தவ னாகவோ முகம்மதியனாகவோ மதம் மாறினால் ‘அந்தோனி' ‘ஜான்’ 'ஜோசப்' முதலிய பெயர்களையாவது, 'அப்துல்லா' ‘ரஹ்மான்’ ‘யூசூப்' முதலிய பெயர்களையாவது அம்மதச் சார்புபற்றிச் சூட்டிக் கொள்கின்றான். அதுபோல, பௌத்த வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப் பௌத்தர் சூட்டிக்கொண்டதில் வியப்பு இல்லை. இனி, சங்க நூல்களில் வடமொழிப் பெயர்கள் காணப்படவில்லை என்பதும் தவறு. சங்கச் செய்யுள்களை இயற்றியவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டவர் ‘சாத்தனார்' என்னும் பெயர் கொண்டிருக்கிறார். இப் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் தமிழ்த் திரிபு. '(இளம்)